குமரகுரு கல்வி நிறுவனங்களின் நிறுவனரான ‘அருட்செல்வர்’ டாக்டர் நா. மகாலிங்கம் அவர்களின் தொலைநோக்குப் பார்வையைத் போற்றும் வகையில், ஆண்டுதோறும் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ‘மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்’ வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2026ம் ஆண்டிற்கான உதவித்தொகை  வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரி, கே.சி.டி பிசினஸ் ஸ்கூல், குமரகுரு வேளாண்மை நிறுவனம் மற்றும் குமரகுரு ஸ்கூல் ஆப் பிசினஸ் ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 1,675 மாணவ, மாணவியருக்கு மொத்தம் ரூ.1.6 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. கல்வி, விளையாட்டு மற்றும் என்.சி.சி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் முதல் 10 சதவீத மாணவர்களுக்கு, தலா ரூ.10,000 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

நம்பிக்கையே மூலதனம்

விழாவிற்குத் தலைமை தாங்கி குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசுகையில், கல்வி என்பது வெறும் மதிப்பெண்கள் சார்ந்தது மட்டுமல்ல, அது தனிமனித ஒழுக்கத்தையும் சமூக மாற்றத்தையும் உருவாக்கும் கருவியாக இருக்க வேண்டும் என்பதே நமது நிறுவனரின் கனவாகும்.

வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை, விடாமுயற்சி, புதிய முயற்சிகளில் இறங்கும் துணிவு, இலக்கை எட்டும் மன உறுதி ஆகிய நான்கு தூண்கள் வெற்றி பெற அவசியம். மதிப்பெண்களைக் கண்டு சோர்ந்துவிடாதீர்கள்; உங்களது தன்னம்பிக்கையே உண்மையான மூலதனம் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொழில்நுட்பத்தோடு இணையுங்கள்

KUMARAGURU 2 scaled

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கேபிஆர் குழுமத்தின் தலைவர் கே.பி. ராமசாமி மாணவர்களிடையே பேசுகையில், இன்றைய உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாம் முன்னேற வேண்டுமானால், வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது; புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் கற்றுக்கொள்ளும் ஆர்வம் வேண்டும் என்றார்.

தமது சொந்த வாழ்க்கையை உதாரணமாகக் காட்டிய அவர், “குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலும், தன்னம்பிக்கையோடு உழைத்தால் எவரும் சிகரத்தை எட்ட முடியும் என்பதற்கு எனது பயணமே சாட்சி” என்று ஊக்கமளித்தார்.

நிகழ்வில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தாளாளர் பாலசுப்ரமணியம், குமரகுரு கல்வி நிறுவனங்களின் பிரசிடெண்ட் சங்கர் வாணவராயர், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் எழிலரசி, மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.