தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான பவன்குமார், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தை துவக்கி வைத்தார்.

இந்த வாகனம் மூலம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஒளிபரப்பப்பட உள்ளன. தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், வாக்குரிமையின் முக்கியத்துவம் என்ன என்பதையும் விளக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வின் போது, வாகனத்தில் ஒளிபரப்பப்பட்ட விழிப்புணர்வு குறும்படங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, அதன் செயல்திறனை ஆய்வு செய்தார். தொடர்ந்து, மின்னணு வீடியோ வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்த முயற்சியின் மூலம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களிடம் நேரடியாக சென்றடைந்து, வாக்காளர் விழிப்புணர்வை அதிகரிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், தேர்தல் காலத்தில் இத்தகைய புதிய தொழில்நுட்ப வசதிகள் மூலம் மக்களிடம் தகவலை விரைவாகவும், விளக்கமாகவும் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.