மருத்துவத் துறையில் டிஜிட்டல் புரட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் கோயம்புத்தூர் லீ மெரிடியன் ஹோட்டலில் உயர்மட்டப் பயிலரங்கு நடைபெற்றது.
புதிய டிஜிட்டல் மருத்துவ சேவையில் செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு என்ற தலைப்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதுகுறித்து கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி விளக்கினார்.
CAHOCON 2026 முன்னோட்டமாக நடக்கும் இந்த நிகழ்வு, வரும் ஏப்ரல் 10 முதல் 12 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ள 10-வது ‘CAHOCON 2026’ மற்றும் தெற்காசியாவிற்கான முதல் ‘ISQua’ மண்டல மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வத் தொடக்கமாகும்.
இந்த மாநாடு “தொழில்நுட்பம், அக்கறை மற்றும் நம்பிக்கை – புதிய மருத்துவ விதிமுறை” என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. இதில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட உலகளாவிய பிரதிநிதிகள் மற்றும் மருத்துவத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கேஎம்சிஹெச் தலைவ டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த பயிலரங்கில் துறைசார் வல்லுநர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். கேஎம்சிஹெச் கதிரியக்கத் துறைத் தலைவர் டாக்டர் மேத்யூ செரியன் கதிரியக்கத் துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து விளக்கினார்.
கேஎம்சிஹெச் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுப்ரமணியம் புற்றுநோய் சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு துல்லியத்தை மேம்படுத்துகிறது என்பது பற்றிப் பேசினார்.
1 ஹேட் சொலூஷன்ஸ் முதன்மை நிர்வாக அதிகாரி கார்த்தி புருஷோத்தமன், உலகளாவிய மருத்துவத் துறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னணிப் பயணம் குறித்துப் பேசினார்.
குப்புசாமி நாயுடு மருத்துவமனை முதன்மை தகவல் அதிகாரி பிஜு வேலாயுதன், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் டிஜிட்டல் கருவிகளின் பங்கு குறித்து விளக்கினார். நைன்த் டைமென்ஷன் இயக்குனர் அருணாச்சலம், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நோயாளிகளின் தரவை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து உரையாற்றினார்
ஆயோஸ்டா இந்தியா இயக்குனர் ரவிசங்கர், மருத்துவத் துறையில் அதிகரித்து வரும் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது குறித்து விளக்கினார்.
கேஎம்சிஹெச் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி பேசுகையில், மருத்துவத் துறையில் சிறந்து விளங்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது இனி ஒரு விருப்பம் அல்ல, அது ஒரு கட்டாயம் என்று குறிப்பிட்டார். கோயம்புத்தூர் மருத்துவப் புதுமைகளின் முக்கிய மையமாகத் திகழ்வதை இந்த முகாம் உறுதிப்படுத்துகிறது என்றார்.
