தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்குகிறது. இதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், கூட்டணியை இறுதி செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் ஏற்கனவே தொகுதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு இன்று முடிவு செய்யப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சி பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தின் முடிவில் முதல் கட்டமாக பாஜக, பாமக, அமமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பாஜகவுக்கு – 27 தொகுதிகள், பாமகவுக்கு – 18 தொகுதிகள், அமமுகவுக்கு – 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இம்முறை கூடுதலாக 7 தொகுதிகளை பெற்றிருக்கிறது.
கடந்த தேர்தலில் ஒன்றுபட்ட நிலையில் போட்டியிட்ட பாமக தற்போது ராமதாஸ், அன்புமணி என இரண்டு அணிகளாக பிரிந்துள்ளது. அப்போது 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றனர். இரண்டு அணிகளாக பிரிந்து இருப்பது வாக்கு வங்கியில் பிளவை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு இம்முறை 5 தொகுதிகளை குறைத்து, 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் தனி அணியாக களம் கண்ட அமமுக, 165 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் அதில் ஒன்றில் கூட வெல்லவில்லை. இம்முறை தேசிய ஜனநாயக கூட்டணியில், எடப்பாடி பழனிசாமி உடனான அரசியல் மோதல் போக்கை கைவிட்டு, டிடிவி தினகரன் கைகோர்த்துள்ளார். தென் மாவட்ட செல்வாக்கை கருத்தில் கொண்டு அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பிற கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு, இன்று இரவிற்குள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதில் தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய குடியரசு கட்சி, புதிய நீதிக் கட்சி, பசும்பொன் தேசிய கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் அடங்கும்.
