பன்னாட்டு பாதுகாப்பு துறை நிறுவனமான எம்.பி.டி.ஏ. மற்றும் இந்தியாவின் முன்னணி பல்துறை குழுமமான எல் & டி. நிறுவனம் இணைந்து உருவாகியுள்ள கூட்டு நிறுவனமான எல் & டி. எம்.பி.டி.ஏ மிசைல் சிஸ்டம் சார்பில் கோவை மாநகரில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மைய கட்டிடம் இன்று திறக்கப்பட்டது.
கோவை சங்கனூர் சாமி வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இந்நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.1.07 கோடி மதிப்பீட்டில் சிறப்பு கட்டுமான வடிவமைப்புடன் 4 எண்ணிக்கையிலான ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் கட்டப்பட்டது.
இதை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். 6746 சதுர அடி பரப்பளவில் இந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், எல் & டி. எம்.பி.டி.ஏ மிசைல் சிஸ்டம் நிறுவன பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்ட இம்மையத்தில், 1600 சதுர அடி, பரப்பளவில் 4 எண்ணிக்கையிலான வகுப்பறைகள் உள்ளன.
மேலும் 650 சதுர அடி பரப்பளவில் சமையலறை, பொருள் இருப்பு அறைகள் மற்றும் கழிவறைகள், 260 சதுர அடி பரப்பளவில் புல்வெளி, 350 சதுர அடி பரப்பளவில் சிறுவர் விளையாட்டு திடல் என 3230 சதுர அடி பரப்பளவில் கட்டிடம் உள்ளது.
இம்மையத்தின் மூலமாக சங்கனூர், கண்ணப்ப நகர், அண்ணா நகர் குட்டை, அய்யாவு வீதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பயன் பெறுவார்கள்.
