இன்று முன்னாள் தமிழக முதலமைச்சரும், அதிமுகவின் பொது செயலாளருமான செல்வி.ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கான அவரின் தியாகங்களை நினைவு கூர்ந்து போற்றி வணங்குவதாக அதிமுக தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

“தன்னை வீழ்த்த வந்த சோதனைகளையே சாதனைகளாக்கி, அதனையே தனக்கான அரியாசனமாக்கியவர், அரசியல் சதுரங்கத்தில் எதிரிகளைக் காணாமல் செய்த சிங்கப்பெண்மணி. மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆரம்பித்த, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, மாபெரும் எஃகு கோட்டையாக வளர்த்தெடுத்து, தமிழ் நாட்டிற்கு அரணாகவும், தமிழக மக்களுக்குத் தாயாகவும் நின்று காத்தவர்.”

“மக்களால் நான், மக்களுக்காக நான்” என தவ வாழ்வு வாழ்ந்து, தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுத்தவர். ஏழை, எளிய மக்களின் நலம் காக்க எண்ணற்றத் திட்டங்களை வழங்கியத் தன்னிகரற்றத் தலைவி, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளில், அவரின் பொற்பாதங்களைத் தொட்டு, பெரும்புகழைப் போற்றி வணங்குகின்றேன்,” என அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில், கழகத்தை வழிநடத்தி வரும் மாண்புமிகு புரட்சித்தமிழர், அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்களின் தலைமையில், அம்மாவின் ஆட்சி தமிழ்நாட்டில் மீண்டும் மலர இந்நாளில் உறுதியேற்போம்.என்றென்றும் அம்மா,” என அவர் கூறியுள்ளார்.