கோவை பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணியர் கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தின் கும்பாபிஷேக விழா வரும் பிப்ரவரி 22ம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் ஸ்ரீ லலிதாம்பிகை அறக்கட்டளை நிறுவனர் ஸ்வாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி பேசுகையில்: கோவை பெரிய தடாகம் பகுதியில் ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஸ்ரீ லலிதாம்பிகை டிரஸ்ட் மூலம், அன்னதானம், கல்வி, மருத்துவ உதவி ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கோவிலில் பிப்ரவரி 19ம் தேதி காலை 9 மணிமுதல் யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. விமான கலச கும்பாபிஷேகம் பிப் 22 காலை 8 மணியளவில் நடைபெறுகிறது. அன்னதானம் மற்றும் பிற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த வைபவத்திற்கு ரிஷிகேஷ் ஸ்வாமி தயானந்த ஆசிரமத்தைச் சேர்ந்த ஸ்வாமி சாக்ஷாத்கிருதானந்த சரஸ்வதி மற்றும் கோயம்புத்தூர் அர்ஷ வித்யா குருகுலத்தைச் சேர்ந்த ஸ்வாமி சதாத்மானந்த சரஸ்வதி, பேரூர் ஆதீனம் குருமகா சன்னிதானம் மருதாச்சல அடிகளார், கௌமாரார மடாலயம் குருமகாசன்னிதானம் இராமானந்த குமர குருபர சுவாமிகள் மற்றும் பல மடாதிபதிகள் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
