தொழில் நகரமான கோவையில் எம்.எஸ்.எம்.இ. என அழைக்கப்படும் சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் மிக அதிகம் உள்ளன.
பம்ப் செட், மோட்டார், வெட் கிரைண்டர் போன்ற பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தேவையான பாகங்களை அவர்கள் கொடுக்கும் மூலப்பொருளை வைத்து உருவாக்கி கொடுக்கும் ஜாப் ஒர்கிங் யூனிட்டுகள் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு கோவையில் ஏராளம் இருக்கின்றன.
சமீபகாலமாகவே ஜி.எஸ்.டி., மற்றும் மூலப்பொருள் விலையுயர்வால் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக சிறு,குறு, நடுத்தர தொழில்துறையினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி தங்கள் கஷ்டத்தை தெரிவித்து வந்துள்ளனர். அதே போல மின்சார கட்டான உயர்வு பற்றியும் அவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.
வரும் பிப்.17ம் தேதி, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த இடைக்கால பட்ஜெட் மேல், கோவையை சேர்ந்த தொழித்துறையினர், குறிப்பாக குறுந்தொழில்கள் செய்வோருக்கு உள்ள சில முக்கிய எதிர்பார்ப்புகள் பற்றி தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தலைவர் ஜேம்ஸ் இடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது :-
மின்சாரத்தை பொறுத்தவரை தமிழக அரசு உயர்த்தியுள்ள நிலை கட்டணத்தை குறைக்கவேண்டும் என தொடர்ந்து நாங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றோம். 400%க்கு மேல் நிலைக்கட்டணம் ( பிக்சட் சார்ஜ்) உயர்த்தப்பட்டுள்ளது. இது குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்ப்புடன் உள்ளோம்.
அதேபோல கோவையில் குறுந்தொழில்களுக்கான தொழில்பேட்டை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம் என அவர் கூறினார்.
“நமது மாநிலத்தில் குறுந்தொழில் செய்பவர்கள் அதிகம் உள்ள பகுதி, கோவை. இங்கு குறுந்தொழில் செய்பவர்கள் நலன் கருதி அரசே இதற்கான தொழில்பேட்டையை உருவாக்கவேண்டும். குறுந்தொழில் செய்பவர்கள் ஜாப் ஆர்டர் செய்பவர்களாக உள்ள நிலையில் அவர்களால் கடன் பெற்று ஒரு இடத்தை வாங்கி, கட்டிடம் எழுப்ப முடியாது. எனவே அரசே இங்கு தொழில்பேட்டை உருவாக்கி, பின்னர் கட்டிடத்தை பயன்படுத்துவோரிடம் மாத வாடகையை பெற்றுக்கொள்ளும் வகையில் இது ஏற்படுத்தப்படவேண்டும்,” என அவர் கூறினார்.
இதுபற்றி ஏற்கனவே அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கின்றோம்.
அதேபோல, ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இருந்த வாட் (Value Added Tax) கணக்கு தொடர்பாக இப்போது அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர். எல்லாவற்றையும் முடித்த பின்னர் இப்போது கணக்கை காட்ட சொல்வது எதற்கு என்பது புரியவில்லை. எனவே இதை திரும்ப பெற கோரிக்கை விடுத்து வருகின்றோம். இது தொடர்பான அறிவிப்பும் பட்ஜெட்டின் போது வெளிவந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
