பட்டிமன்ற மேடைப் பேச்சாளர் ராஜாவின் பேச்சுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த நிகழ்வின் போது, உணவு கொடுத்த பெண்ணின் சாதி குறித்து ராஜா கேட்டதாக பேஸ்புக்கில் தகவல்கள் பரவி வந்தன. இதனைத் தொடர்ந்து, வீடியோ வெளியிட்டு அந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பட்டிமன்றம் ராஜா வீடியோவில் பேசியுள்ளதாவது: அமெரிக்காவில் அட்லாண்டா மாகாணத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக நாங்கள் சென்றிருந்தோம். அந்த நிகழ்வுக்கு வந்த பல தமிழ் சொந்தங்கள் தங்கள் இல்லங்களில் இருந்து சாப்பாடு செய்து எங்களுக்குக் கொண்டு வந்தார்கள்.

சில நேரங்களில் அங்குள்ள உணவு நம் ஊர் உணவுகளைவிட சுவையாக இருக்கும். அங்கு வருகிறவர்கள் தங்கள் ஊர் பெயரையும் எங்களிடம் கூறுவார்கள். அப்போது ஒருவர் என்னிடம் காரைக்குடியிலிருந்து வருவதாகச் சொன்னார்.

அப்போது நான் அவங்களிடம் செட்டிநாடா என்று தான் கேட்ட நியாபகம் இருக்கிறது, செட்டியார் என்று கேட்கவில்லை. இவ்வளவு சுவையா செட்டிநாடு உணவு இருக்கே என்று தான் கேட்ட நியாபகம் இருக்கு. அவங்க யாரு என்ன? என்ன சாதி? என்றெல்லாம் யோசிக்கிற அளவு எனக்கு சின்ன புத்தி கிடையாது.

நான் பல ஊர்களுக்குப் பயணித்திருக்கிறேன். எங்கேயாவது சாதிய உணர்வோடு நான் இருந்திருக்கிறேனா? என்னை அறிந்தவர்களுக்கும், என்னோடு பயணிக்கிறவர்களுக்கும் என்னை நன்றாக தெரியும். தமிழர் என்ற சாதியைத்தான் நான் பெருமையாகக் கருதுகிறேன்.

அந்த நிகழ்வு பிப்ரவரி 3ம் தேதி நடைபெற்றது. ஆனால் பிப்ரவரி 9ம் தேதிதான் இப்படியான தகவல்கள் பரப்பப்படுகின்றன. நான் பேசியது தவறாக இருந்திருந்தால் அப்போதே அந்த சகோதரி என்னிடம் கேட்டிருக்கலாம். அல்லது பட்டிமன்ற நிகழ்ச்சியின் போது கூட கேட்டிருக்கலாம். எல்லோரும் மகிழ்ச்சியாக, பனிக்குளிருக்கு மத்தியில் நிகழ்வுக்கு வந்திருந்தார்கள்.

அங்கு வந்த எங்களுக்கு மக்கள் உணவு கொடுக்கும்போது, அவர்களுடைய முகம் உறவினர்களைவிட நெருக்கமாக எங்களுக்குத் தெரியும். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என தமிழ் கூறுகிறது.

எங்களுக்காகப் பயணித்து உணவு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களிடம் நான் சாதி பற்றிக் கேட்பேனா? அது மிகவும் தவறான பதிவு. மிகவும் மனவலியோடு இதைப் பகிர்கிறேன். தமிழ்ச் சொந்தங்கள், இந்தக் கருத்துகளைப் புறந்தள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.