கழிவு பஞ்சு விலை கட்டுப்பாடின்றி உயர்ந்ததால் ஓ.இ மில்கள் கடும் நஷ்டத்தில் சிக்கியுள்ளன; விலை நிர்ணயத்தில் அரசு தலையீடு அவசியம் என மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பருத்தி விலை ரூ.51,000 வரை குறைந்திருந்த போதிலும், கழிவு பஞ்சுகளின் விலைகள் ரூ.107, 108, 110, 112, 115 என தொடர்ந்து உயர்த்தப்பட்டு, தற்போது கோம்பர் வேஸ்ட் ரூ.123–125 என்ற அளவில் ஸ்பின்னிங் மில்கள் விற்பனை செய்து வருகின்றன. இதனால் ஓ.இ மில்களை நடத்தவே இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது கழிவு காட்டன் விலை கிலோக்கு ரூ.23 உயர்ந்திருந்தாலும், வார்ப் நூல் ரூ.165, வெப்ட் நூல் ரூ.155 என்ற விலைக்கும் கீழாகவே நூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் கழிவு பஞ்சின் விலை உயர்ந்தும், நூலுக்கு தகுந்த விலை கிடைக்காத காரணத்தால், கடந்த மூன்று மாதங்களாக ஏற்பட்டுள்ள நஷ்டத்தை குறைக்க முடியாத நிலை தொடர்கிறது.
30 கவுண்ட் நூலுக்கு கடந்த நான்கு மாதங்களாக போதிய ஆர்டர்கள் இல்லாத காரணத்தால், பலர் சலவை நூல் உற்பத்திக்கு மாறி விட்டனர். இந்நிலையில், நூல் விலை உயர்வு எனக் கூறி மாஸ்டர் வீவர்கள் 50% உற்பத்தி நிறுத்தம் அறிவித்துள்ளதால், எங்களது நிலைப்பாட்டை தொடர்ந்து அரசிடம் தெரிவிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
2014-க்கு முன்பு வரை, பருத்தி விலையிலிருந்து அதிகபட்சமாக 48% வரை மட்டுமே முதல் தர கழிவு பஞ்சான கோம்பர் வேஸ்ட் விலை இருந்தது. ஆனால் கொரோனா பேரிடருக்குப் பிறகு, மத்திய மற்றும் மாநில அரசாங்க மில்கள் செயல்படாத காரணத்தால், தனியார் ஸ்பின்னிங் மில்களில் டெண்டர் நடைமுறை குறைந்து, தூய பருத்தி விலையிலிருந்து 80%-க்கும் மேல் கழிவு பஞ்சின் விலையை தன்னிச்சையாக நிர்ணயம் செய்து அறிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, ஓ.இ மில்கள் மட்டுமின்றி, விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட சங்கிலித் தொடரில் உள்ள அனைவரும் கடுமையான நிதி இழப்பை சந்தித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.28 லட்சம் மதிப்பிருந்த ஓ.இ இயந்திரம், தற்போது ரூ.4.5 லட்சமாக மதிப்பிழந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட மில்கள் கிரே நூல் உற்பத்தியில் இருந்து வெளியேறியுள்ளன.
மத்திய, மாநில அரசு காட்டன் கார்ப்பரேசன் ஆப் இந்தியா நிறுவனம் பருத்தி பஞ்சை டெண்டர் மூலம் ஸ்பின்னிங் மில்களுக்கு விற்பனை செய்வதைப் போல, கழிவு பஞ்சுகளையும் டெண்டர் முறையில் ஸ்பின்னிங் மில்கள் விற்பனை செய்ய அறிவுறுத்தி, அதனை கண்காணிக்க வேண்டும்.
சங்கிலித் தொடரில் உள்ள தொழில்களையும் தொழில்முனைவோர்களையும் பாதுகாக்க அரசிடம் வலியுறுத்தி வேண்டுகோள் விடுக்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.
