கோயமுத்தூர் சட்டக்கல்லூரியின் முதலாமாண்டு முன்னாள் மாணவர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் சஞ்சயன் எழுதிய ‘குற்ற வழக்குகளில் சாட்சிகள் விசாரணை’ என்ற புத்தகம் வெளியீட்டு விழா ஸ்டேன்ஸ் மேல்நிலைப் பள்ளி அரங்கில் நடைபெற்றது.

வரவேற்புரையில் மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு பேசுகையில்: இந்தப் புத்தகம், தங்கத்தை விட தரம் உயர்ந்தது. வழக்கறிஞர் சஞ்சயன் ஒழுக்கம், நேர்மை, அனுபவம் உள்ளிட்டவற்றின் எடுத்துக்காட்டாக உள்ளார் எனப் பேசினார்.

புத்தகம் பற்றிய அறிமுக வாழ்த்துரையை மூத்த வழக்கறிஞர்கள் நாகசுப்பிரமணியம், துரைராஜ், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் மன்ற இணைத்தலைவர் அருணாசலம், கோயமுத்தூர் வழக்கறிஞர் மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், கோயமுத்தூர் வழக்கறிஞர் சங்கத்தின் சங்கரன், சிஸ்லா கலை இலக்கிய மன்ற தலைவர் கலைமாமணி ஜீவானந்தம் உள்ளிட்டோர் வழங்கினர்.

Book release 2 scaled

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் பேசியதாவது: இந்த புத்தகத்தில் மூத்த வழக்கறிஞர் சஞ்சயன் தனது 43 ஆண்டுகள் அனுபவத்தை சிறந்த முறையில் எடுத்துக் கூறியுள்ளார்.

இந்தப் புத்தகம் பல்வேறு குற்ற வழக்குகளில் சாட்சிகள் விசாரணை எவ்வாறு நடந்தது என்பதனை மிகவும் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. இது இளம் வழக்கறிஞர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். அனுபவம் மிக்க மூத்த வழக்கறிஞர்களிடம் இளம் வழக்கறிஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

விழா பேருரையை நூலாசிரியர் சஞ்சயன் வழங்கினார். நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத்தலைவர் குமார், கோயம்புத்தூர் வழக்கறிஞர் மன்ற நிர்வாகிகள்,  வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.