கோவை காந்திபுரம் பகுதியில் சுமார் 1 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையத்தை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள பேருந்து நிலைய வளாகத்திற்கு மாற்ற கோவை மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வந்த நிலையில் அவ்வாறு பேருந்து நிலையத்தை மாற்றவோ அல்லது அதை புதுப்பிக்கவோ தற்போதைக்கு திட்டம் எதுவும் இல்லை என தகவல் வெளிவந்துள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து நிலையமான இந்த வளாகத்தில் சென்னை, திருப்பதி, பெங்களூரு, திருநெல்வேலி, புதுச்சேரி, தஞ்சாவூர் போன்ற தமிழக மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் தினசரி மொத்தம் 130 பேருந்து சேவைகள் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே கோவை காந்திபுரம் பகுதியின் இரு இடத்தில் நகர பேருந்து நிலையமும், மற்றொரு இடத்தில் மத்திய பேருந்து நிலையமும் உள்ளது. மூன்றாவதாக அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து நிலையமும் (திருவள்ளுவர் பேருந்து நிலையம்) இருப்பதால், இதை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு மாற்றினால் அது இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என கருதப்பட்டது.
10 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளிடம் உள்ளது. போதுமான பார்க்கிங் வளாகம், பயணிகள் அமர இடவசதி, சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி ஆகியவை தேவை என பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த பேருந்து நிலையத்தை மாற்ற திட்டம் இல்லை என அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அதற்கு பதில் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு தேவைப்படும் வசதிகள் பற்றி சென்னையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக உயரதிகாரிகள் முன்பு எடுத்துரைக்கப்படும் எனவும், கழிவறை பராமரிப்பு போன்ற பணிகள் தொடர்பான குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பேருந்து நிலையத்தின் வெளியே தனியார் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றுவது ஒரு காரணமாக பார்க்கப்படும் நிலையில் இதையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
