சட்டமன்றத்தில் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து விட்டு, நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றி பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும், யார் தேசத்தின் பாதுகாவலர்கள்?, யார் தேசத்தின் விரோதிகள்? என்பதை நாட்டு மக்கள் நன்கறிவார்கள் என்றும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளை கண்டு மத்திய பாஜக அரசு அஞ்சுவதாக, முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். தேசப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே பாஜக என்ற கட்சியே துவங்கப்பட்டது. ‘Nation first, Party next, Self last’ அதாவது தேசம் முதலில், அடுத்து கட்சி, கடைசியில் தனிநபர் நலன் என்பதுதான் பாஜகவின் உயிர்நாடி கொள்கை.
இதனால் தான் பாஜகவை தொடர்ந்து மூன்றாவது முறையாக நாட்டு மக்கள் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். எனவே, தேசப் பாதுகாப்பு தொடர்பாக பாஜக அரசு மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டுவது அவரது கட்சியினரே நம்பப் போவதில்லை. யார் தேசத்தின் பாதுகாவலர்கள்?, யார் தேசத்தின் விரோதிகள்? என்பதை நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.
வெளிவராத புத்தகத்தில் இருப்பதாக கூறி, இந்திய பாதுகாப்பு தொடர்பாக தவறான தகவல்கள் பேசப்படுவதை நாடாளுமன்றத்தில் எப்படி அனுமதிக்க முடியும்? ஜனநாயகம், அரசியலமைப்பு பாதுகாப்பு குறித்து மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எம்பிக்கள், நாடாளுமன்ற இருக்கை மீது ஏறி நின்று அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது, காகிதங்களை கிழித்து மக்களவைத் தலைவர் மீது வீசியுள்ளனர். இப்படிப்பட்ட மோசமான செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்கிறாரா முதலமைச்சர் ஸ்டாலின்?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அரசை விமர்சித்து பேச துவங்கினாலே, சபாநாயகர் அப்பாவு அவர்கள் உடனே குறுக்கிட்டு அனைத்தையும் நீக்குகிறார். பேச தடை போடுகிறார். மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூற மறுப்பது ஏன்? என்ற கடந்த நான்கரை ஆண்டுகளில் பலமுறை கேட்டு விட்டேன். இந்தக் கேள்வியை அவைக் குறிப்பில் கூட இடம்பெறாமல் நீக்கும் அளவுக்கு திமுகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அஞ்சுவது ஏன்? தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து விட்டு, நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்று பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? எனக் கூறப்பட்டுள்ளது.
