வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேனா என்று தெரியவில்லை. காலமும், நேரமும் தான்  அதற்கு பதில் சொல்லும் என கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டில் உட்கட்டமைப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பு மக்களுக்குமான பட்ஜெட். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் என அனைவரும் வரவேற்றுள்ளனர். சிறு, குறுந் தொழில்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பட்ஜெட்டாக உள்ளது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இழுபடியாக இருந்த அமெரிக்க ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. 18 சதவீதம் மற்றும் வரி வரவேற்கத்தக்க ஒன்று.

தமிழக முதலமைச்சர் எதை எடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருக்காமல் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்க்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தரிகட்டுப் போய்விட்டது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பிரச்சாரத்தில் இறங்கி விட்டார்கள்.

என் தந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவரை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்று தெரியவில்லை. காலமும், நேரமும் தான் அதற்கு பதில் சொல்லும். சிங்காநல்லூர், விருகம்பாக்கம், காரைக்குடி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்தும் விலகுகிறேன். இதைப்பற்றி நயினார் நாகேந்திரனிடன் சொல்லியுள்ளேன். இப்போதைக்கு என்னால் அதிகம் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. சிங்காநல்லூரில் வேறு ஒரு பொறுப்பாளரை கட்சி தலைமை நியமிக்கும் என்றார்.