ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை சார்பில் ‘ஆதியோகி ரத யாத்திரை’ தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.  அதன்படி ஆதியோகி ரத யாத்திரை திருநெல்வேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி 3 நாட்கள் நடைபெற உள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு திருநெல்வேலி பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் தென்கைலாய பக்தி பேரவையின் சிவனடியார்கள் இளங்கோவன், சண்முகசுந்தரம் மற்றும் பிரேம் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத பக்தர்கள் தங்களது ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை நடத்தப்படுகிறது.

தமிழகத்தின் நான்கு திசைகளிலும் பயணிக்கும் 4 ஆதியோகி ரதங்களை தமிழ்நாட்டின் பாரம்பரிய ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள் தொடங்கி வைத்து அவர்களின் அருளாசியினை வழங்கியுள்ளனர்.

அந்த வகையில் தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை, கோவையில் உள்ள ஆதியோகி வளாகத்தில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி, தவத்திரு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர்.

தெற்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை டிசம்பர் 23-ம் தேதி, மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

அதேபோன்று வடக்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில், தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கடந்த டிசம்பர் 26-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்தாண்டு ஆதியோகி ரத யாத்திரை தமிழ்நாடு முழுவதும் உள்ள பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக நடைபெறுகிறது. இதில் குறிப்பாக திருநெல்வேலியை உள்ளடக்கிய தெற்கு மண்டலப் பகுதிகளில் அமைந்துள்ள பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக இந்த யாத்திரை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலியில் வரும் ஜன 23-ம் தேதி பழையபேட்டை, நெல்லையப்பர் கோவில், ராமையன்பட்டி, மானூர், உக்கிரன்கோட்டை, அழகிய பாண்டியபுரம், குப்பனாபுரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆதியோகி ரதம் ஜன.24-ம் தேதி தேவர் குளம், வன்னிக்கோனேந்தல், பனைவடலி சத்திரம், மூவிருந்தாளி, கயத்தாறு, தாழையூத்து, சங்கர்நகர் வழியாக பயணித்து ஜெயேந்திரா பள்ளியை சென்றடைய உள்ளது.

அதன் பின்னர் ஜன.25-ம் தேதி இராஜவல்லிபுரம், பாளையங்கோட்டை, கே.டி.சி.நகர், சாரதா கல்லூரி, நான்குநேரி டோல்கேட், வள்ளியூர், செட்டிகுளம் உள்ளிட்டப் பகுதிகள் வழியாக ரத யாத்திரை நடைபெற உள்ளது.

கோவையில் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழா தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது. அந்த வகையில் திருநெல்வேலியில் குற்றால சாலையில் அமைந்துள்ள சோனா மஹாலில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது.

திருநெல்வேலியை அடுத்து ஜன. 26 அன்று கூடங்குளத்தில் தொடங்கும் இந்த யாத்திரை, தொடர்ந்து ஜன. 27 – 29 தூத்துக்குடியிலும், ஜன. 30 திருச்செந்தூரிலும், ஜன. 31 கோவில்பட்டியிலும் நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில், பிப். 1 – 3 நாகர்கோவிலிலும், பிப். 4 – 5 வெள்ளிச்சந்தையிலும் ஆதியோகி ரதம் பயணிக்கும். அடுத்து பிப். 6 – 7 நாட்டாலம், பிப். 8 – 9 மார்த்தாண்டம், பிப். 14 அன்று நாட்டாலம் வழியாக பயணித்து இறுதியாக பிப். 15 அன்று மார்த்தாண்டத்தில் ஈஷா மஹாசிவராத்திரி நேரலை செய்யப்படும் வளாகத்திற்கு சென்றடைய உள்ளது.