தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு விடுமுறை நாட்களான 15,16,17 மற்றும் 18 ஆகிய 4 நாட்களில் கோவை செம்மொழிப் பூங்காவினை 1,00,154 எண்ணிக்கையிலான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திபுரம் பகுதியில் ரூ.208.50 கோடி செலவில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவினை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 25.11.2025 தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்ததைத் தொடர்ந்து, நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும், பள்ளி, மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த செம்மொழி பூங்காவில் நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில், சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம் , கடல் திராட்சை, திருவோட்டு மரம், கலிபுடா, வரி கமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம் உள்ளிட்ட அரிய வகை மரங்கள் மற்றும் செடிகளை கொண்ட செம்மொழி வனம், நறுமண வனம், ஐந்திணை வனம், நலம் தரும் வனம்,  மலர்வனம், புதிர் வனம், நிழல் வனம், 1000-த்திற்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் கொண்ட ரோஜா தோட்டம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர் தோட்டம்,பாறை தோட்டம், மலர் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திரத் தோட்டம், பசுமை வனம் உள்ளிட்ட பல வகையான தோட்டங்கள்  38.69 ஏக்கர் பரப்பாளவில்  அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தோட்டங்களின் பெயர்கள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப தனித்துவமான  முறையில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் QR CODE பயன்படுத்தியும்,  இந்த தோட்டங்களில் உள்ள மரம் மற்றும் செடி வகைகளை  பற்றி தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று தமிழ் பண்பாட்டின் முக்கிய அடையாளமாய், தமிழ் இலக்கியங்களில் முக்கிய அங்கமாய்த்திகளும், கடையேழு வள்ளல்களான பேகன், பாரி, காரி, ஆய் ஆண்டிரன், அதியன், நள்ளி, ஓரி ஆகியோரின் கற்சிலைகள், தாவரவியல் அருங்காட்சியகம், படிப்பகங்கள், இயல் இசை நாடகம் என முத்தமிழ் மற்றும் இயற்கை, பாரம்பரியம் சார்ந்த  நிகழ்ச்சிகளுக்காக 500 -பேர் அமரக்கூடிய திறந்தவெளி அரங்கம், உயர்தர உடற்பயிற்சி கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், உள்வன மாதிரி காட்சி அமைப்பு, பட்டறிவு கூடம், மரம் மற்றும் செடி வளர்போரை ஊக்குவிக்கும் வகையில் நாட்றாங்கள் பண்ணை, குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா மற்றும் எஐ மற்றும் விஆர் கேம்ஸ் கொண்ட உள் விளையாட்டு அரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்தியேக விளையாட்டுப் பூங்கா,   மேம்படுத்தப்பட்ட நடைபாதை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், 150க்கும் மேற்பட்ட கல் இருக்கைகள், மேலும் செம்மொழி பூங்கா முழுவதும் இரவில் ஜொலிக்கும் வண்ணம் அலங்கார விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன், பொதுமக்கள் நடை பயிற்சி செய்வதற்கு கால் வலி ஏற்படாத வகையில் பிரத்தியேகமான முறையில் மண் அடுக்குகளால் அமைக்கப்பட்ட நடைபாதை ,தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள், மின்சார வாகனங்கள்,  உணவகம், ஒப்பனை அறை, பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், மழைநீர் சேகரிப்பு மற்றும் மறு பயன்பாடு அமைப்பு, பூங்கா வளாகத்தில் மருத்துவக்குழு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்புகளுடன் உலக தரத்தில் உருவாக்கப்பட்டு பொதுமக்கள், சிறுவர்கள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பணிபுரிவோர் என அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் பசுமை சுற்றுலாத்தலமாக திகழும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இப்பூங்காவினை கடந்த 11.12.2025 முதல் நாள்தோறும் காலை முதல் மாலை வரை ஏராளமான பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு விடுமுறை நாட்களான,

  • 15.01.2026 (வியாழக்கிழமை) அன்று 23,819 நபர்களும்,
  • 16.01.2026 (வெள்ளிக்கிழமை) அன்று 31,744 நபர்களும்,
  • 17.01.2026 (சனிக்கிழமை) அன்று 25,848 நபர்களும்,
  • பொது விடுமுறை நாளான 18.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 18,743 நபர்களும்,

ஆகிய 4 நாட்களில் மொத்தம் 1,00,154 எண்ணிக்கையிலான ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு மகிழ்ந்தனர் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.