சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் பொங்கல் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக காரமடையைச் சேர்ந்த இயற்கை விவசாயி ராஜேந்திரன், அவரது துணைவியார், மற்றும் ரங்கராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து கயிறு இழுக்கும் போட்டி, கபடி விளையாட்டுகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இயற்கை விவசாயி ராஜேந்திரன் பேசுகையில், நஞ்சில்லாத உணவு வழங்க வேண்டும் என்ற வகையில் பயிர்களை வளர்த்து, மக்களுக்குத் தருகின்ற உயர்ந்த கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றேன். அதற்கு ஊக்கமளித்துவரும் மக்களுக்கு நன்றி என்றார்.
விழாவிற்குத் தலைமையேற்று பள்ளிச் செயலர் கவிதாசன் பேசுகையில்: மற்ற தொழில்களில் உள்ளது போல விவசாயத்தில் வருமானத்திற்கோ, விளைச்சலுக்கோ உத்தரவாதம் இல்லை. நமக்கு உணவு அளிக்கும் அவர்களை நாம் கொண்டாட வேண்டும். உணவை ஒருபோதும் வீணாக்கக் கூடாது.

ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர் என அனைவரையும் மதிக்க வேண்டும். அப்துல் கலாம் கூறியது போல, மனதில் அறம் இருந்தால், குணத்தில் அழகு இருக்கும்; வீட்டில் மகிழ்ச்சியும், நாட்டில் ஒழுங்கும், உலகில் அமைதியும் நிலவும் என்று பேசினார்.
விழாவில், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
