ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்த சில நாட்களிலேயே பணம் கரைந்து போய்விடுவது பலருக்கும் பெரிய சிக்கலாக உள்ளது. ஆரம்பத்தில் கையில் பணம் இருப்பதால் கவலை இல்லாமல் செலவு செய்துவிடுகிறோம். ஆனால் சரியான திட்டமிடல் இல்லாததால், எதற்காக எவ்வளவு செலவாகிறது என்பதற்கே கணக்கிருக்காது. இதனால் மாதக் கடைசியில் பணம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
தொடர்ச்சியாக இப்படி நடந்தால், எதிர்காலத்திற்கு எவ்வித சேமிப்பும் இல்லாமல் போகும். சேமிப்பு இல்லாத வாழ்க்கை, என்று வேண்டுமானாலும் பொருளாதாரத்தில் மோசமான சூழலில் சிக்க வைக்கும். ஒவ்வொரு மாதமும் பணத்தை தேவைக்கு ஏற்ப செலவு செய்து, அதில் ஒரு சேமிப்பை ஏற்படுத்தினாலும் எதிர்பாராத பொருளாதார சூழ்நிலைகள் உருவாகும். இப்படி இருக்கையில் சேமிப்பே இல்லாமல் இருப்பது மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி விடும். எனவே, மாதந்தோறும் வருமானத்தை புத்திசாலித்தனமாக திட்டமிட்டு செலவழிப்பது அவசியம்.
அத்தியாவசிய தேவை
சம்பளம் கிடைத்த உடனே முதலில் செய்ய வேண்டியது அத்தியாவசிய தேவைகளுக்கான தொகையை ஒதுக்குவதாகும். மளிகை பொருட்கள், மருத்துவச் செலவுகள், மின்சார பில், இணைய ரிசார்ஜ், போக்குவரத்து, வீட்டு வாடகை, குழந்தைகளின் பள்ளி கட்டணம், கிரெடிட் கார்ட் பில்கள் போன்றவை தவிர்க்க முடியாத செலவுகள். சம்பளத்தின் பெரும்பகுதி இவற்றிற்கே செலவாகும் என்பது உண்மை, ஆனால் இவை அவசியமானது. அதே நேரம் எதில் சிக்கனம் செய்து குறைக்கலாம் என்பதை ஆராய்ந்து செயல்படுத்தலாம்.
அவசரத் தேவை
வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் எதிர்பாராத சூழ்நிலை வரலாம். வேலை இழப்பு, திடீர் உடல் நலப் பிரச்சனை, பெரிய மருத்துவச் செலவு போன்ற நேரங்களில் கையில் பணம் இல்லாமை மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தும்.
இதைத் தவிர்க்க, அவசரத் தேவைக்கென சம்பளத்தின் குறைந்தபட்சம் 10% தொகையை ஒவ்வொரு மாதமும் சேமித்து வைத்திருப்பது நல்லது. இப்படியாக, மூன்று மாத சம்பள அளவிற்கு ஒரு அவசர நிதி அக்கவுண்டில் தயாராக இருந்தால், எந்த திடீர் பிரச்சனையும் சமாளிக்கலாம். அதோடு, குடும்பத்தினர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல ஹெல்த் இன்சூரன்ஸ் வைத்திருப்பது கடன் வாங்க வேண்டிய நிலையைத் தவிர்க்க உதவும்.
திட்டமிடாத செலவுகள்
திட்டமிடப்படாத ஆனால் அடிக்கடி வரும் செலவுகளுக்காகவும் ஒரு சிறிய தொகையை ஒதுக்கி வைப்பது நல்லது. அதாவது வாகன ரிப்பேர், வீட்டுப் பொருட்கள் பழுது பார்க்கும் செலவுகள், திருமணங்கள், விழாக்கள், சடங்குகள் வரலாம். இவை அவசரகால செலவுகள் இல்லை என்றாலும், இதற்கென ஒரு 10% தொகையை தனியாக ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
எதிர்கால சேமிப்பு
சம்பளத்தில் அத்தியாவசிய செலவுகளுக்கு 50%, அவசரத் தேவைகளுக்கு 10% , திட்டமிடாத தீடீர் செலவுகள் 10% என்று பிரித்தவுடன், மீதமுள்ள 30% தொகையை எதிர்காலத்திற்கு முதலீடு செய்யுங்கள். தங்கத்தில் காசுகளாக முதலீடு செய்வது, எஸ்.ஐ.பி அல்லது நம்பகமான இன்சூரன்ஸ் திட்டங்கள் அல்லது பங்குச் சந்தை பற்றி தெளிவான புரிதல் உள்ளவர்களுக்கு பங்கு முதலீடு போன்றவை நல்ல தேர்வுகளாக இருக்கும்.
திட்டமிடல்
சம்பளத்தை இவ்வாறு பகுதிகளாகப் பிரித்து, திட்டமிட்டு செலவு செய்வதால் நிதி நிலைமை சீராகும். இந்த திட்டமிடலுக்கு உங்களது வருமானம் போதவில்லை எனில், தேவையற்ற செலவுகளை குறைத்து, வருமானத்தை அதிகரிக்கும் வழிகளைப் பார்ப்பது முக்கியம். சரியான திட்டமிடல் இருந்தால் பொருளாதாரம் நிலையாக இருக்கும்.
