கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அங்கு நடைபெற்றன கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.

பூங்காவில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த் தோட்டம், மணம்கமிழ் தோட்டம், பாலைவனத் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம் உள்ளிட்ட 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம், கலிபுடா, வரிகமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்கும மரம் உள்ளிட்டவைகள் உள்ளன.
குறிப்பாக, செம்மொழி வனத்தில் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள மரங்கள், செடிகள் நடப்பட்டுள்ளன. ரோஜா தோட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் கடையெழு வள்ளல்களின் கற்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.
செம்மொழிப் பூங்கா வளாகத்தில் தரைத் தள வாகன நிறுத்துமிடத்தில் மொத்தம் 453 கார்கள், 10 பேருந்துகள் மற்றும் 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்குக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் சேகரிப்பு வடிகாலும் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், வன மாதிரி காட்சியமைப்பு, குழந்தைகள் விளையாட்டுத் திடல், சிறுவர்களுக்கான உள்விளையாட்டு அறை, மாற்றுத்திறனாளிகள் விளையாடுவதற்கு ஏதுவாக தனித்தன்மையான விளையாட்டுத்திடல் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளும் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன.
நுழைவுச்சீட்டு வழங்குமிடம் மற்றும் அனுபவ மையக் கட்டடம், 500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், பூங்காவில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அறை, உணவகம், ஒப்பனை அறை, சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது
மகளிர் சுயஉதவி குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக மதி அங்காடி நிறுவப்பட்டுள்ளது. நுழைவுச்சீட்டு மற்றும் அனுபவ மையக் கட்டடத்தில் பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் கூடிய அருங்காட்சியகம் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம், இளம்வயதினர் படிப்பதற்கு ஏதுவாகப் படிப்பகம், முதியோர்களும் மாற்றுத்திறனாளிகளும் பயணிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வளாகத்தில் உள்ள மரங்கள், தாவரங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய பெயர்ப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு அதில் QR குறியீடுகள், Barcode போன்ற தொழில்நுட்ப வசதிகளும் நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
