கோவை சரவணம்பட்டி சத்தி ரோட்டில் பில்லூர் – II திட்டத்தின் பிரதான குடிநீர் குழாய் உடைந்த நிலையில்  சீரமைக்கும் பணி இன்னும் நீடிப்பதால், மாநகராட்சி வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் 11 நாட்களாக  குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

பில்லுார் 2வது திட்டத்தில் குடிநீர் சப்ளையாகும் குழாயில் அழுத்தம் தாங்காமல், 13ம் தேதி இரவு குழாய் உடைந்தது. இரண்டு நாள்கள் நடைபெற்ற பணிக்குப் பிறகு 15ம் தேதி இரவு புதிய குழாய் பொருத்தப்பட்டு பம்ப் செய்யப்பட்டது

ஆனால் மறுநாள் 16ம் தேதி மீண்டும் அதே பகுதிக்கு அருகில் குழாய் உடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கசிவு தென்பட்டதால் மீண்டும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பில்லூர் திட்டத்தில் பதிக்கப்பட்ட குழாய்கள் 40 ஆண்டுகள் பழமையானவை என்பதால் அழுத்தத்தை தாங்க முடியாமல் இவ்வாறு உடைப்பு ஏற்படுகிறது என மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். தற்போது இரண்டு மோட்டார்களை மட்டும் இயக்கி, ராமகிருஷ்ணாபுரம் தொட்டிக்கு நீர் அனுப்பி அங்கிருந்து பிற பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மாநகராட்சி வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் 11 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். குடிநீர் தேவையை சமாளிக்க கேன் குடிநீர் வாங்கி வருகின்றனர்.

பலரது வீட்டிலும் தொட்டியில் சேமித்து வைத்திருந்த நீர் காலியாகி விட்டநிலையில், லாரி தண்ணீர் வாங்கி ஊற்றுகின்றனர். இதனைப் பயன்படுத்தி விலையை அதிகரித்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.