ஐ.நா. நிலைத்த வளர்ச்சி இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு, குழந்தைகளுக்குப் புரியும் வகையில் கதைகளாக எழுதப்பட்ட “A Girl with 17 Dreams” (தமிழில்: ஒரு சிறுமியின் 17 கனவுகள்) என்ற நூல் கோவை அறிவியல் மையத்தில் வெளியிடப்பட்டது. இதனை 12 வயது சிறுமி புனிதம் எழுதியுள்ளார்.
புத்தகத்திற்கு இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையிடமிருந்து சிறப்பு பாராட்டு கிடைத்தது. அவரின் பரிந்துரையில், சிறுமியின் தந்தை செந்தில்குமார் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
விழாவில் வேலம்மாள் இன்ஸ்டிட்யூஷன்ஸ் தலைவர் வேல்முருகன், சௌபாக்யா என்டர்ப்ரைசஸ் வரதராஜன், ஜிஎஸ்டி உதவி கமிஷனர் மனிமோகன், ஆம்னி புக்ஸ் லைப்ரரி ராஜன், பிர்லா ஓபன் மைன்ட்ஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல் இயக்குநர் சந்தோஷ் சுப்பிரமணியன் போன்ற முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் ’18-வது கனவு’ என்ற அமைப்பை சிறுமி புனிதம் அறிமுகப்படுத்தினார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இந்த நூலை வழங்கி, கனவு காணும் தைரியம், மாற்றத்தை உருவாக்கும் பொறுப்பு மற்றும் உலகைப் பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றை ஊக்குவிப்பதை இந்த அமைப்பு நோக்கமாக கொண்டுள்ளது.
