கோவை முழுவதும் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் மேலும் 1,400 கண்காணிப்பு கேமராக்களை, மாநகர காவல்துறை நிறுவவுள்ளது என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

புதிய கேமராக்கள், சமூக விரோதிகள் நடமாடும் காலி நிலங்களின் நுழைவு, வெளியேறும் பகுதிகளில் அமைக்கப்படவுள்ளது.

இதேபோன்று, கோவை விமானநிலையம் அருகே உள்ள பிரிந்தாவன் நகர்
பகுதியில், கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த இடத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

தற்போது நகரம் முழுவதும் 700 சாலைகளை நோக்கி அமைக்கப்பட்ட காவல் கண்காணிப்பு கேமராக்கள் இயங்கிவருகின்றன. ஆனால், தனி நபர்கள் பொருத்திய பல கேமராக்கள் செயலிழந்துள்ளது. அவற்றை மீண்டும் செயல்படுத்துமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

அவர் மேலும் கூறியதாவது: அனைத்து பீட் அதிகாரிகளும் ஒவ்வொரு நாளும், மாலையில் திறந்த வெளிகளிலும், குற்றங்கள், விபத்துக்கள் மற்றும் சச்சரவு ஏற்படும் இடங்களாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளிலும் ரோந்து செல்கின்றனர்.

வழக்கமான ரோந்து பணியின் காரணமாக, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது காயம் சம்பந்தப்பட்ட வழக்குகள் குறைந்துள்ளன. எதிர்காலத்தில் மேலும் பல இடங்களில் கண்காணிப்பை வலுப்படுத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.

தற்போது கோவை நகர காவல்துறையில் 59 இரு சக்கர ரோந்து வாகனங்களும், 25 நான்கு சக்கர ரோந்து வாகனங்களும் உள்ளன. இவை அனைத்தும் ஜி.பி.எஸ். வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, குற்றம் நிகழ்ந்த பீளமேடு காவல் நிலையத்தின் கீழ் ஐந்து இருசக்கர ரோந்து குழுக்களும், இரண்டு நான்கு சக்கர ரோந்து குழுக்களும் பணியில் உள்ளன.

பிரிந்தாவன் நகர் – எஸ்.ஐ.எச்.எஸ். காலனி சாலை வழியாக ஒவ்வொரு இரவும் ரோந்து மேற்கொள்ள பீளமேடு காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்று மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.