காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து வெளியூர்களுக்கு தினசரி 750 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 50 பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு சுமார் 51 ஆண்டுகளாகின்றன. தினசரி லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. பேருந்து நிலையம் சுகாதாரமாக இல்லை. கழிவறை முறையாக பராமரிக்கப்படுவதில்லை.

கட்டிடத்தின் மேற்கூரைகள் சேதமடைந்து, கான்கிரீட் கலவை இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகுதல், வடிகால் வசதி குறைபாடு, இருக்கை பற்றாக்குறை உள்ளன. எனவே, பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தை இரண்டு தளங்களுடன்  நவீன வசதிகளுடன் புதுப்பிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான செலவு ரூ.30 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அரசின் நிர்வாக அனுமதி பெற கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதித்துறைக்கு கோப்பு சென்றுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.

பேருந்து நிலையத்தின் பரப்பளவு குறுகியதாக இருப்பதால், சென்னை ஐஐடி நிபுணர்கள் நிலத்தின் தன்மையை ஆய்வு செய்து அறிக்கை வழங்கினர். அதனை அடிப்படையாகக் கொண்டு நில அளவியல், தொழில்நுட்ப மற்றும் கட்டட வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டுள்ளது.

பேருந்து நிற்கும் இடம், பயணிகளுக்கான காத்திருப்பு அறைகள், குளியலறையுடன் கூடிய கழிப்பறைகள், பொருட்கள் பாதுகாப்பு அறை, வாகனங்கள் நிறுத்துமிடம், பாலூட்டும் அறை, நேர  காப்பாளர் அலுவலகம், தகவல் அறை, வணிகக் கடைகள் போன்ற வசதிகள் இடம்பெற உள்ளன.