உதட்டின் அழகிற்காக பல பெண்கள் லிப்ஸ்டிக் போடுகிறார்கள். தற்போது பல வடிவங்களில் இவை கிடைக்கின்றன. ஆனால் அதிலிருக்கும் ஆபத்துகள் என்னவென்று தெரிந்துகொள்வதும் அவசியம்.

பெரும்பாலான லிப்ஸ்டிக்கில் அதிக அளவில் ஈயம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஈயம் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் திறன் கொண்டது. தொடர்ந்து லிப்ஸ்டிக் பயன்படுத்தும் பழக்கம் மூளையின் செயல்பாட்டையும், ஹார்மோன் சமநிலையையும் குலைக்கக்கூடும். இதன் விளைவாக மனஅழுத்தம், உடல் சோர்வு மற்றும் ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

அதேபோல், ஒரு நாளில் பலமுறை லிப்ஸ்டிக் பயன்படுத்தும் பழக்கம் உடலுக்குள் நச்சுப் பொருட்கள் சேர்க்கும் அபாயத்தை உருவாக்குகிறது. இதனால் வயிற்றில் கட்டிகள் உருவாகும் அபாயம் உள்ளதாக சில ஆராய்ச்சிகள் எச்சரிக்கின்றன.

லிப்ஸ்டிக்கில் சேர்க்கப்படும் கனிம எண்ணெய்கள் சருமத்தின் துளைகளை அடைத்து, உதடுகளின் இயற்கையான அழகையும், நிறத்தையும் கெடுக்கும். லிப்ஸ்டிக்கில் குரோமியம், காட்மியம், மக்னீசியம் போன்ற கனிமங்கள் அடங்கியிருக்கும். இதில் குறிப்பாக காட்மியம் சிறுநீரகத்தில் படிந்தால், அது நாளடைவில் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தக்கூடும்.

இதன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஃபார்மால்டிஹைடு எனும் வேதிப்பொருள் புற்றுநோயைத் தூண்டும் தன்மை கொண்டது. இதனால் மூச்சுத்திணறல், இருமல், கண் எரிச்சல் மற்றும் சரும பிரச்சினைகள் உருவாகலாம்.

எனவே, உதடுகளை அழகாக வைத்திருக்க வேதிப்பொருள் நிறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கையான வழிகளைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. உதாரணமாக, பீட்ரூட் சாறு உதடுகளுக்கு இயற்கையான பிங்க் நிறத்தை வழங்கும். இது ஆரோக்கியமான மாற்றாகும்.