கோவையில் மேற்குப் புறவழிச்சாலை திட்டத்தின் முதல்கட்ட பணிகள் முடிவடையும் நிலையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகள் எப்போது துவங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது, மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தரப்பில் சாத்தியக்கூறு ஆய்வு நடைபெறுவதால், முழுத் திட்டமும் தாமதமடையுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
மதுக்கரை அருகே மைல்கல்லில் தொடங்கி நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32.43 கி.மீ. நீளத்தில் நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டம் மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.80 கி.மீ. தூரம், இப்பணி தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்ளுக்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மாநில நெடுஞ்சாலைத்துறை மதிப்பீடு தயாரித்து அரசுக்கு ஏற்கனவே கருத்துரு அனுப்பியுள்ளது.
ஆனால், இத்திட்டத்துடன் சேர்த்து கிழக்குப்புறவழிச்சாலை திட்டத்தையும் மாநில அரசு, நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளது. இதற்காக ஆணையம், தனியார் ஆலோசனை நிறுவனத்தை நியமித்து இரு திட்டங்களுக்குமான சாத்தியக்கூறு ஆய்வை தொடங்கியுள்ளது.
ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்டு, பணிகள் துவங்கும் நிலையில் இருந்தபோது, புதிய ஆய்வு தொடங்கியிருப்பது மேற்குப்புறவழிச்சாலை திட்டம் முழுமையடைவதற்கு தாமதமாகுமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.
மேற்குப்புறவழிச்சாலை முழுவதும் (32.43 கி.மீ.) நான்கு வழிச்சாலையாக அமைந்தால் மட்டுமே, கனரக வாகனங்கள் நகருக்குள் நுழையாமல் செல்ல முடியும். மேட்டுப்பாளையம் மற்றும் கேரளா நோக்கி செல்லும் காய்கறி வாகனங்கள் நரசிம்மநாயக்கன்பாளையம் வழியாக மைல்கல் வரை நேரடியாகப் பயணிக்கலாம். இதனால் கோவை நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
ஆனால், தற்போது ஒரே ஒரு கட்டம் மட்டுமே முடிந்தால், கனரக வாகனங்கள் நகரப்பகுதியில் வழக்கம்போல் செல்வதற்கே வாய்ப்பு அதிகம். எனவே, மீதமுள்ள இரண்டு கட்டங்களையும் விரைவில் துவக்க வேண்டும் என தொழில்துறையினர் வலியுறுத்துகின்றனர்.
ஆணையம் சார்பில், “மேற்குப்புறவழிச்சாலை திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வுப் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அறிக்கை இன்னும் பெறப்படவில்லை,” என தெரிவித்தனர்.
மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 2ம் மற்றும் 3ம் கட்டப் பணிகளுக்கான திட்ட அறிக்கையில் நான்கு வழிச்சாலைக்கு தேவையான மதிப்பீடு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், ஆணையம் வழியாகப் பணிகள் மேற்கொள்ளப்படும்போது, சுங்கச்சாவடி, கூடுதல் வசதிகளுக்காக அதிக இடம் தேவைப்படும். இதனால் நிலம் கையகப்படுத்தும் அளவும், மொத்த மதிப்பீடும் மாறக்கூடும் என்பதால் சாத்தியக்கூறு ஆய்வு மீண்டும் நடத்தப்படுகிறது,” என தெரிவித்தனர்.
