இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் காலையில் எழுந்ததும் அலுவலகம், கல்லூரி என ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில், “என்ன சாப்பிடுவது?” என்ற கேள்விக்கான எளிய பதிலாக பிரட் தான் பலருக்கும் நினைவுக்கு வரும்.
இரண்டு துண்டு பிரட், சிறிது ஜாம் அல்லது வெண்ணெய்… அதுதான் நம் காலை உணவு. ஆனால், சமீப காலமாக ‘பிரட் சாப்பிட்டால் புற்றுநோய் வரும்’ என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது உண்மையா? பொய்யா? எனப் பார்க்கலாம்.
பிரட், சப்பாத்தி, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற மாவுச்சத்து நிறைந்த பொருட்களை அதிக வெப்பத்தில் டோஸ்ட் செய்யும்போது, அக்ரிலாமைட் எனப்படும் ஒரு ரசாயனம் உருவாகிறது. இந்த ரசாயனத்தை ஆய்வகங்களில் விலங்குகளுக்கு அதிக அளவில் கொடுத்து சோதனை செய்தபோது, அவற்றில் புற்றுநோய் செல்கள் உருவானது கண்டறியப்பட்டது. இதை அடிப்படையாக வைத்து தான், ‘பிரட் சாப்பிட்டால் மனிதர்களுக்கும் புற்றுநோய் வரும்’ என்ற வதந்தி பரவத் தொடங்கியது.
நாம் தினமும் சாப்பிடும் சில பிரட் துண்டுகளில் இருக்கும் அக்ரிலாமைட் அளவு மிகவும் குறைவு. விலங்குகளுக்குக் கொடுக்கப்பட்ட அளவு மிக மிக அதிகம். மேலும், விலங்குகளின் உடல் செயல்முறை மனிதர்களை விட முற்றிலும் வேறுபட்டது. பிரட்டில் இருக்கும் குறைந்த அளவு அக்ரிலாமைட் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தும் என்பதற்கு உறுதியாக நிரூபிக்கப்பட்ட எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அப்படியென்றால் நாம் சாப்பிடும் பிரட் பாதுகாப்பானதா? அதுவும் இல்லை. கடைகளில் அழகாகப் பேக் செய்யப்பட்டு வரும் வெள்ளை பிரட் பெரும்பாலும் மைதாவால் செய்யப்படுகிறது.
மைதா என்பது கோதுமையில் உள்ள நார்ச்சத்து மற்றும் பிற சத்துக்களை நீக்கி தயாரிக்கப்படுவது. இதனால் அது உடலில் விரைவாக ஜீரணமாகி, ரத்தத்தில் சர்க்கரை அளவை திடீரென உயர்த்தும். இதுவே நாளடைவில் நீரிழிவு, உடல் பருமன், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்குக் காரணமாகலாம்.
பிரட் சாப்பிட்டால் புற்றுநோய் வரும் என்ற வதந்தி பொய்யானது. ஆனால் வெள்ளை பிரட்டை தினமும் சாப்பிடுவது நம் உடலுக்குச் சிறந்தது அல்ல. சில சமயங்களில் அவசரத்திற்காக சாப்பிடுவது பரவாயில்லை, ஆனால் அதை வழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள்.
