கோவையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் சிறுவாணி அணை, பில்லூர் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குளங்கள், தடுப்பணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பணை திறக்கப்பட்டுள்ளது. வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் குளிப்பதும், மீன்பிடிப்பதும் ஆக உள்ளனர். காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட கோரிக்கை எழுந்துள்ளது.
மழையால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் சித்திரைச்சாவடி தடுப்பணை நண்டங்கரை தடுப்பணை ஆகிய அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. உக்கடம் பைபாஸ் சாலை, திருச்சி சாலை உட்பட பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
மழை நிலவரம் குறித்து கோவையில் உள்ள வானிலை ஆய்வாளர்கள் கூறும்போது, இலங்கை அருகே நீடித்து வரும் காற்றழுத்து தாழ்வு நிலை, மன்னர் வளைகுடா வழியாக வடமேற்கு திசை நோக்கி நகரும் என்பதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளின் கிழக்கு சரிவுகளில் மிக கனமழை பெய்யும். இதனால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
கோவை நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்புள்ளது. வியாழக்கிழமை முதல் கொங்கு மண்டலத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும். வரும் வெள்ளிக்கிழமை முதல் மாத இறுதிவரை மழையின் அளவு குறைவாக இருக்கும் என்று கூறினர்.
