சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவ மாணவியர் ‘‘பசுமை காப்போம்! தூய்மை மீட்போம்’’ விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம் பிளாக்தண்டர் பகுதியில் தொடங்கி பள்ளியின் விளையாட்டு மைதானம் வரை சுமார் 5 கிலோமீட்டர் தொலைவு வரையில் நடைபெற்ற ஓட்டத்தினை, மேட்டுப்பாளையம் காவல்துறை உதவி ஆய்வாளர் ஆனந்தன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பள்ளிச் செயலர் கவிதாசன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
சுமார் 750 பேர் மினி மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டனர். நான்கு, ஐந்து வகுப்புகள் பிரிவில் மாணவியரில் திரிசூல் அணியின் கோமகள், மாணவரில் ஆகாஷ் அணியின் துகிலன் ஆகியோர் முதலிடம் பெற்றனர். ஆறு, ஏழு, எட்டு வகுப்புகள் பிரிவில் மாணவியரில் திரிசூல் அணியின் கனிஷ்கா மற்றும் மாணவரில் பிருத்வி அணியின் ஹரீத் ஆகியோர் முதலிடம் பெற்றனர். ஒன்பது முதல் பனிரெண்டு வகுப்புகள் பிரிவில் மாணவியரில் ஆகாஷ் அணியின் சஷ்ரிதா மற்றும் பிருத்வி அணியின் துருவன் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

பள்ளிச் செயலர் கவிதாசன் பேசுகையில்: முயற்சியும், பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால் சாதரண மனிதரும் சாதனையாளர் ஆகலாம். முயற்சிகள் சில சமயம் நடக்காமல் போகலாம். முயற்சி எடுப்பதில் தவறிவிடக்கூடாது.
நாம் கிழிக்கின்ற ஒவ்வொரு தாள்களும் மரங்களின் மரணச் சான்றிதழ்கள் என்பதனை மாணவர்கள் உணர வேண்டும். மரங்களை வெட்டாமல் தாள்களை உருவாக்க முடியாது. நோட்டுப் புத்தகங்களில் உள்ள தாள்களைப் பயன்படுத்தும்போது மரங்களின் நிலையை எண்ணிப்பார்த்துப் பயன்படுத்த வேண்டும்.
எந்தவொரு வளத்தையும் வீணடிக்கக்கூடாது. பசுமையை வளர்த்து தூய்மையைக் காப்பது ஒவ்வொருவரின் கடமை என்று பேசினார். நிகழ்வில் பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, கல்விப்புல முதன்மையர் ஷீலா கிரேஸ், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

