சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவர் பிரகலாதன் குமாரசாமி, ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய திருக்குறள் பேச்சுப் போட்டியில் கோயம்புத்தூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றதுடன், சென்னையில் நடைபெறவிருக்கின்ற மாநில அளவிலான இறுதிச்சுற்றுப் போட்டிக்குத் தகுதி பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சுப் போட்டி சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கோவை மாவட்ட அளவிலான இடைநிலைப் பிரிவில் பல்வேறு பள்ளிகளிலிருந்து 228 மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
மேல்நிலைப் பிரிவில் சச்சிதானந்த பள்ளியின் 11ம் வகுப்பு மாணவர் பிரகலாதன் குமாரசாமி முதலிடம் பெற்றார். 11ம் வகுப்பு மாணவி குழலினியாள், 10ம் வகுப்பு மாணவர் சஸ்வந்த் பாலாஜி ஆகியோர் ஊக்கப்பரிசினைப் பெற்றனர்.
இடைநிலைப் பிரிவில், 8ம் வகுப்பு மாணவர் தீபக் சூர்யா 2ம் இடம் பெற்றார். அதே பிரிவில் 8ம் வகுப்பு மாணவர் விணீஸ், 6ம் வகுப்பு மாணவி பூர்ண ரித்திகா ஆகியோர் ஊக்கப்பரிசு பெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவ மாணவியரை காட்டூர் சட்ட ஒழுங்கு காவல்துறை ஆய்வாளர் ஐயாசாமி, சான்றிதழ்களையும் கோப்பைகளையும் வழங்கிப் பாராட்டினார்.
சச்சிதானந்த பள்ளி 8வது முறையாக மாநில அளவிலான இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. அத்துடன், பள்ளி மாணவ மாணவியர் ஐந்து முறை மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளனர்.
மாநில அளவில் சென்னையில் அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிச்சுற்றுப் பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ளவிருக்கின்ற மாணவர் பிரகலாதன் குமாரசாமியைப் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி, செயலர் கவிதாசன், முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், புல முதன்மையர் ஷீலா கிரேஸ் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
