இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு மற்றும் தனியார் வங்கி இணைந்து திருப்பூரில் எக்ஸிம் வர்த்தகம், சுங்கம் மற்றும் வெளிநாட்டு வர்த்தக கொள்கையின் கீழ் உள்ள திட்டங்கள், ஊக்கத்தொகைகள் குறித்தான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம் கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
கருத்தரங்கில் ஏற்றுமதியாளர்களுக்கு அரசிடம் இருந்து கிடைக்கும் பல்வேறு வகையான திட்டங்கள், ஊக்கத்தொகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்றுமதி தொழிலில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் உள்ள நடைமுறைகள், ஆவணங்கள் தயாரித்தல், விலைப்பட்டியல் தயாரித்தல், தரம் மற்றும் பாதுகாப்பு சான்றிதழ்கள் பெறுதல், சரக்கு பட்டியலிடுதல் ஆகியவற்றை தயார் செய்து ஏற்றுமதி அறிக்கையை தயார் செய்வது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. சுங்கத்துறையில் உள்ள சட்டங்கள், வெளிநாட்டு வர்த்தக கொள்கையின் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

நிகழ்வில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆலோசகர் சிவராமன், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் கோவை மண்டல தலைமை பொறுப்பாளர் சுவாமிநாதன், தனியார் வங்கி நிர்வாகம் சார்பில் விஜயகுமார், வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குனரகத்தைச் சேர்ந்த ஹரிப்பிரியா, திருப்பூரைச் சேர்ந்த தொழில்துறையினர் கலந்துகொண்டனர்.
