கோவை மாநகராட்சி பகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. அணையின் மொத்த உயரம் 49.5 அடி. அணையில் இருந்து நாள்தோறும் சுமார் 100 எம்.எல்.டி நீர் எடுக்கப்பட்டு, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கேரளாவில் அமைந்துள்ள சிறுவாணி அணையை கேரளா நீர் வளத்துறையினர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் ஆகியோருடன் இணைந்து நேரில் ஆய்வு செய்தார்.
சிறுவாணி அணைக்கான நீர் வரத்து, நீர் வெளியேற்றம் குறித்து கேட்டறிந்தார். கோவைக்கான தண்ணீர் செல்லும் நீர் திறப்பு பகுதி, தண்ணீர் செல்லும் சுரங்கப்பாதை பகுதியை ஆய்வு செய்தார். அணை பகுதியில் புதிதாக வர்ணம் பூசுதல், அணையில் படர்ந்துள்ள செடிகள், மரங்கள் அகற்றும் பணிகள் உள்ளிட்ட புனரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் அணையின் நீர் கசிவு சரி செய்வது தொடர்பாக உரிய விரிவான திட்ட அறிக்கையினை தயார் செய்வது தொடர்பாக கேரளம் மாநில நீர்வளத்துறையினர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை நடந்தது.
