ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி வளாகத்தில் 80-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

ஹோட்டல் துறையில் சிறந்த நிபுணரும், கல்வியாளரும், இந்தியாவின் இசைப் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவருமான வி. எம். சீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார்.

விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பழங்குடியினர், ஈஷாவைச் சுற்றியுள்ள கிராம மக்கள், ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரமவாசிகள் கலந்து கொண்டனர். ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சத்குருவின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில், மகத்தான சாத்தியங்களின் நுழைவாயிலில் நிற்கும் நம் அன்பிற்குரிய பாரதத்திற்கு, 80-வது சுதந்திர தினத்தில் நல்வாழ்த்துகள். நாம் அனைவரும் இந்த நுழைவாயிலைக் கடந்து, இந்த மாபெரும் தேசத்தின் மற்றும் நாகரிகத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நலமான வாழ்வு கிடைக்கும் நிலையை அடைய பாடுபட வேண்டிய தருணம் இது.
ஒரு நாகரிகமாக, நாம் பல ஆயிரம் வருடங்களாக செழித்து வந்திருக்கிறோம், ஆனால் இப்போது ஒரு தேசமாக நாம் உயர வேண்டிய காலத்தில் இருக்கிறோம். இது மற்ற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக அல்ல, பாரதத்தின் அடிப்படை இயல்பாக இருக்கும் அரவணைத்துக்கொள்ளும் தன்மையின் அடையாளமாக உயர்வதற்கு.
சாத்தியங்களின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் நாம், அதை நிதர்சனமாக மாற்றுவதற்கான ஒரு திருப்புமுனையாக இந்த 80-வது சுதந்திர தினம் அமையட்டும் எனக் கூறியுள்ளார்.
