கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் மத வழிபாட்டு தலங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூடுமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட வாரியாக டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பல கடைகளை மூடியது. இருப்பினும், சில பகுதிகளில் உத்தரவுக்கு உட்பட்ட கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் விஜய், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மூட உத்தரவிடப்பட்ட 717 கடைகளில் 604 கடைகள் மட்டுமே மூடப்பட்டிருந்ததும், மீதமுள்ள கடைகள் தொடர்ந்து இயங்கி வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட முதல்வர், மீதமுள்ள கடைகளையும் உடனடியாக மூடி, அதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினார்.
இதையடுத்து, கோவை மண்டலத்தில் மூட உத்தரவிடப்பட்ட 173 டாஸ்மாக் கடைகளும் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் முதல்வரின் உத்தரவு கோவை மண்டலத்தில் 100 சதவீதம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

