சத்குருவின் பிறந்த நாளான செப்டம்பர் 3ஆம் தேதியை ‘நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினமாக’ ஈஷா தன்னார்வலர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக தமிழகமெங்கும் உள்ள விவசாய நிலங்களில் இன்று ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மரம் நடும் நிகழ்ச்சிகளில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 235 ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலங்களில் 1,00,000க்கும் மேற்பட்ட டிம்பர் மரங்கள் நடவு செய்யப்பட்டன. மேலும் ஈஷா யோக மையம் மற்றும் பேரூர் ஆதீனம் இணைந்து செயல்படுத்தும் ஒரு கிராமம் ஒரு அரச மரம்’ திட்டத்தின் மூலம் 24 கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அரச மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
கோவை ஈஷா யோக மையத்தில், மண் காப்போம் இயக்கம் சார்பாக, விவசாய நிலங்களில் மண் வளம் மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களுக்கு பிரசுரங்கள் வழங்குவது, குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவது மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
