ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன் பேசுகையில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பிரைவேட் லிமிடெட் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக இனிப்புகள் மற்றும் கார வகைகள் தயாரித்து விற்பனை செய்து வரும் பாரம்பரிய நிறுவனம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திருப்பூர், உடுமல்பேட்டை, ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை, திருச்சி, ஸ்ரீரங்கம், கரூர் உள்ளிட்ட தமிழக நகரங்களிலும், கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை போன்ற இந்திய நகரங்களிலும், துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய வெளிநாட்டு நகரங்களிலும் கிளைகள் மூலம் சேவை வழங்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் உற்பத்தி நிலையமான ‘நெய்வேதியம் கிச்சன்’ சுமார் 50 ஆயிரம் சதுர அடிகள் பரப்பளவில் அமைந்துள்ள நவீன உணவு தயாரிப்பு மையமாகும். இங்கு தரம், சுத்தம் மற்றும் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற பணியாளர்கள் தனிநபர் சுத்தம் விதிமுறைகளை பின்பற்றி பணியாற்றுவதுடன், மூலப்பொருட்கள் FIFO முறையில் சேமிக்கப்படுகின்றன. மேலும், பொதிப்பு மற்றும் லேபிளிங் பணிகள் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகின்றன.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தயாரிக்கும் அனைத்து இனிப்புகளும் தூய நெய்யிலேயே தயாரிக்கப்படுவதாகவும், எந்த நிலையிலும் வனஸ்பதி அல்லது மாற்றுப் பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் மைசூர் பா உள்ளிட்ட தயாரிப்புகளும் பல ஆண்டுகளாக தூய நெய்யை மட்டுமே பயன்படுத்தி தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அனைத்து உணவு நிலையங்களிலும் வழக்கமான உணவு பாதுகாப்பு ஆய்வுகள் நடத்தப்படுவதாகவும், இதுவரை எந்த தயாரிப்பிலும் கலப்படம் இருப்பதாக எந்த ஆய்வக அறிக்கையும் உறுதிப்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகளை நிறுவனம் வரவேற்கும் என்றும், அனைத்து ஒழுங்குமுறை அதிகாரிகளுடனும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
