என்.ஐ.எ கல்வி நிறுவனங்களின் பெண்கள் அமைப்பான யுவசக்தி நலச் சங்கம் சார்பாக சர்வதேச மகளிர் தினம், டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் சக்தி சுகர்ஸ் லிமிடெட்டின் செயல் தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கி பேசுகையில்: இந்தியாவில் ஏறத்தாழ 70 சதவீத பெண்கள் பணியாற்றி வருகின்றனர். பல்வேறு தொழில்துறைகளில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெண்களின் முன்னேற்றத்தையும் அதிகாரமளித்தலையும் ஊக்குவிக்கும் வகையில், இம்மாநிலத்தில் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க முன்னுரிமையும் ஆதரவும் வழங்கப்பட்டு வருகிறது எனப் பேசினார்.
தொடர்ந்து தொழில் மற்றும் சமூகம் சார்பான துறைகளில் ஒப்பற்ற சேவையாற்றி வரும் மும்பை டாடா டெக்னாலஜிஸின் தலைமை இயக்க அதிகாரி சுகன்யாவுக்கு யுவசக்தி விருது வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக பொள்ளாச்சியைச் சேர்ந்த பளுதூக்கும் வீராங்கனை கிட்டம்மாள் கலந்துகொண்டு பேசுகையில்: வெற்றியை அடைவதற்குத் தன்னம்பிக்கை, துணிவு மற்றும் உறுதிப்பாடு ஆகியவை முக்கியம். மாணவர்கள் விடாமுயற்சியுடன் கல்வி பயில வேண்டும். கல்விசார் முயற்சிகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெறக் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 6 மாணவியர்கள், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் 6 மாணவியர்கள் மற்றும் என்.ஐ.ஏ. பள்ளிகளின் 12 மாணவியர்கள் என மொத்தம் 24 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.
விழாவில், என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஹரிஹரசுதன், என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் செயலர் சுப்பிரமணியன், எம்.சி.இ.டி முதல்வர் கோவிந்தசாமி, என்.ஐ.ஏ பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
