கடந்த சில மாதங்களாக விண்ணை தொடும் அளவிற்கு தங்கத்தின் விலை ஏறுமுகத்தை நோக்கி சென்றது. தங்கத்தின் விலை லட்சத்தைத் தாண்டி இருந்தாலும், கடந்த சில நாட்களாக சிறிய ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெண் பிள்ளைகளைப் பெற்றோர் கதி கலங்கியுள்ளனர். பல நடுத்தர மக்கள் தங்கம் விலை எப்போது குறையும் என எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.
சர்வதேச அரசியல் சூழ்நிலைகளும், முதலீட்டாளர்களின் விற்பனை போக்கும் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகள். ரஷ்யா – உக்ரைன் போரும், இஸ்ரேல் – ஹமாஸ் போரும் தொடங்கியபோது, உலகளவில் பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்பட்டது. அதனால் முதலீட்டாளர்கள் அதிக அளவில் தங்கம் வாங்கியதால் விலை வேகமாக உயர்ந்தது.
ஆனால், தற்போது அமெரிக்கா முன்னெடுத்து வரும் தூதரக முயற்சிகள் மற்றும் அமைதி பேச்சுவார்த்தைகள் காரணமாக போர் பதற்றம் சற்றே குறைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்று பங்குச்சந்தை, நிலம், கடன் பத்திரங்கள் போன்ற பிற முதலீட்டு வாய்ப்புகளுக்கு திரும்பி வருகின்றனர். இது தங்கத்தின் தேவை குறைய வழிவகுத்துள்ளது.
உலக பொருளாதார நிபுணர்கள் அனுஜ் குப்தா, அமித் கோயல் ஆகியோரின் கணிப்புப்படி, தங்கம் விலை ரூ.80,000 முதல் ரூ.90,000 க்கும் கீழ் வரக்கூடும். எனினும், இது சந்தை நிலைமைக்கு ஏற்ப மாறக்கூடியது என்றும் எச்சரித்துள்ளனர்.
மேலும், ரஷ்யா – அமெரிக்கா இடையேயான மோதல் போக்கால் டாலர் பயன்பாட்டை குறைத்திருந்த ரஷ்யா, தற்போது சர்வதேச வர்த்தகத்தில் மீண்டும் அமெரிக்க டாலரை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டாலரின் தேவைக்காக தங்கத்தை விற்பனை செய்யும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனுடன், அமெரிக்க வட்டி விகித மாற்றங்கள், பணவீக்கம், மத்திய வங்கிகளின் தங்க கையிருப்பு கொள்முதல் கொள்கைகள் போன்ற பொருளாதார காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. டாலர் வலுப்பெற்றால் பொதுவாக தங்கம் விலை குறையும்; டாலர் பலவீனமானால் தங்கம் விலை உயரும் என்பது சந்தை நடைமுறை.
தங்கம் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு நம்பிக்கை அளித்தாலும், சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டால் விலை மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது. எனவே முதலீடு செய்யும் முன் கவனமாக முடிவு எடுக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
