நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நிராகரித்ததா அல்லது மறுத்ததா என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி என்விஎன். சோமு கேள்வி எழுப்பினார்.

திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கியுள்ளது. இதற்கு வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரத் துறை இணை அமைச்சர் டோகன் சாஹு பதில் அளித்து பேசுகையில்: கோவையை பொருத்தவரை, குறைந்த சராசரி பயண தூரம் மற்றும் சாலைகளில் தற்போது உள்ள சராசரி வேகம் காரணமாக, மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவதில் மிகக் குறைந்த நேர சேமிப்பே இருக்கும். எனவே, மெட்ரோவுக்கு மக்கள் மாறுவார்கள் என எதிர்பார்க்க முடியாது.

மாநகராட்சி பகுதியுடன், உள்ளூர் திட்டமிடல் பகுதியின் மக்கள் தொகையும் மெட்ரோ அமைப்பின் சேவையைப் பெறும் என எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி பகுதியைவிட 5 மடங்கு பெரிதாக உள்ள உள்ளூர் திட்டமிடல் பகுதியில் வசிப்பவர்கள் மெட்ரோவை பயன்படுத்துவது கடினம்.

இங்கு 34 கி.மீ தூரத்திற்கு வழித்தடம் அமைக்கப்படும் நிலையில், பயணிகளின் எண்ணிக்கை 5.90 லட்சம் இருக்கவேண்டும். ஆனால், சென்னை மெட்ரோவில் 55 கி.மீ தொலைவிற்கு பயணிகள் எண்ணிக்கை 4 லட்சம் தான் இருக்கிறது. போதுமான வழி இல்லாததால், பல இடங்களில் மெட்ரோ நிலையத்தை நிர்மாணிப்பது சாத்தியமில்லை என தெரிவித்தார்.