பொதுவாக வெங்காயம் வெட்டும்போது கண் எரிச்சல் ஏற்பட்டு நீர் வடியும். கண்ணில் நீர் வடிய வெங்காயம் நறுக்குவோம். ஆனால் வெங்காயம் வெட்டும்போது ஏன் கண்ணீர் வருகிறது தெரியுமா? இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான வேதியியல் செயல்முறை உள்ளது.

வெங்காயம் வளரும்போது, அது மண்ணிலுள்ள கந்தகத் தன்மைகளை உறிஞ்சுகிறது. இவை வெங்காயத்தின் செல்களில் சேமிக்கப்பட்டிருக்கும். வெங்காயத்தை நறுக்கும் போது இந்த செல்கள் உடைகின்றன. அப்போது நொதிகள், சல்பர் வெளியிடப்படுகின்றன. இவை ஒரு வேதியியல் எதிர்வினைக்கு உட்படுகின்றன. இவை ஒருங்கிணைந்து ஒரு வேதியியல் எதிர்வினைக்குள் செல்லும் போது, சின்-புரோபனேதியல் எஸ்-ஆக்சைடு என்ற ஒரு வகை வாயு உருவாகிறது. இந்த வாயு மிகவும் லேசானது.

இந்த வாயு காற்றில் பயணித்து நம் கண்களில் சென்று சேரும். கண்களில் உள்ள ஈரத்துடன் சேர்ந்து சிறிதளவு சல்பூரிக் அமிலம் உருவாகிறது. நம்முடைய கண்கள் மிகவும் உணர்திறன் கொண்டவை. இந்த அமிலம் கண்களை எரிச்சலடையச் செய்யும்.

இந்த எரிச்சலை சமாளிக்கவும், கண்களுக்குள் நுழைந்த அமிலத்தை வெளியேற்றவும், மூளையானது கண் சுரப்பிகளை தூண்டி அதிக கண்ணீரை வெளியிடச் செய்கிறது. இதுவே வெங்காயம் வெட்டும்போது நம் கண்களில் இருந்து கண்ணீர் வர காரணமாக உள்ளது. இது கண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள செய்யும் இயற்கையான முயற்சி ஆகும்.

வெங்காயத்தை நறுக்கும் முன் 15-20 நிமிடங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம். இது குளிர்ந்ததும் என்சைம் செயல்பாடு குறைகிறது. வெங்காயத்தை சிறிது நேரம் நீரில் போட்ட பின்னர் வெட்டலாம். இதனால் வாயு காற்றில் செல்வதற்குப் பதில் தண்ணீரில் கலக்கும்.