சைக்கிள், இருசக்கர வாகனம், கார், லாரி, விமானம் என எந்த வாகனமாக இருந்தாலும், அதன் டயர்கள் எப்போதும் கருப்பு நிறத்தில் இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஏன் டயர்கள் கருப்பு நிறத்தில் தயாரிக்கப்படுகின்றன என்று சிந்தித்திருக்கிறீர்களா?
டயர்கள் முதலில் உருவாக்கப்பட்டபோது, அவை வெள்ளை நிறத்திலேயே இருந்தன. ரப்பரில் இருந்து தயாரிக்கப்பட்டதால் பால் போன்ற வெள்ளை நிறத்தில் முதலில் உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த டயர்கள் பல பிரச்சனைகளை ஏற்படுத்தின. அவை திடமானதாக இல்லை, வெப்பத்தைக் கையாள முடியவில்லை, நீண்ட நாட்கள் நீடித்தும் இல்லை. இதனால், வெள்ளை டயர்களின் பயன்பாடு மெதுவாக குறைந்தது.
பின்னர் டயர்கள் உற்பத்தியில் ‘கார்பன் கருப்பு’ எனப்படும் ஒரு மூலப்பொருள் சேர்க்கப்பட்டது. இந்தப் பொருளே டயர்களுக்கு கருப்பு நிறத்தை அளிக்கிறது. இது டயர்களுக்கு வலிமை, நீடித்த தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை அதிகரிக்கிறது.
வாகனம் ஓடும் போது சாலையுடன் டயர் உராய்வதால் வெப்பம் உருவாகிறது. அந்த வெப்பத்தை தாங்கும் திறனை அதிகரிப்பதே கார்பன் கருப்பின் முக்கிய பணி. வெப்பத்தையும், அழுத்தத்தையும் தாங்குவதால் டயர் விரைவில் சேதமடைவதைத் தடுக்க முடிகிறது. அதனால்தான் கனரக வாகனங்கள், ரேஸ் கார்கள் போன்றவற்றில் கார்பன் கலவை முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.
