ஒரு சட்டமன்ற உறுப்பினர் என நினைக்காமல் சிங்காநல்லூர் பகுதியின் சாலைகள், மழைநீர் வடிகால், பொது பூங்காக்கள் போன்ற வசதிகள் தொடர்பாக ஒரு கவுன்சிலர் போல மக்களுக்கு சுழன்றி பணியாற்றி, மக்களோடு மக்களாக கே.ஆர்.ஜெயராம் பணியாற்றி வருகிறார் என அதிமுக கழக தலைமை நிலையச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது கூறினார்.

கே.ஆர்.ஜெயராமை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்த போது, கோவை மாநகராட்சியில் கடைசியாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஜெயித்தவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த தேர்தலில் சிங்காநல்லூருக்கு உட்பட வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள் கே.ஆர்.ஜெயராமிடம் சென்று மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சனைகளை பற்றி பேசுகின்றனர், அதற்கு அவர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

அன்று ஜெயித்தவர்கள் எங்கே சென்றார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் தூங்குகிறார்கள், மக்கள் அவர்களை அரசியல் ரீதியாக நிரந்தரமாக இனி தூங்க வைப்பார்கள் என கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் பலத்திட்டங்களை கே.ஆர்.ஜெயராம் செய்துள்ளதாக கூறிய வேலுமணி, அதையும் கடந்து தன்னுடைய சொந்த நிதியில் தொகுதி மக்கள் பலரின் மருத்துவம், படிப்பு தொடர்பான உதவிகளை வழங்கியிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் போதே சிறப்பாக செயலாற்றுபவர் மே 4க்கு பிறகு அதிமுக ஆட்சியின் போது மிக சிறப்பாக செயல்படுவார் என அவர் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

2 12 scaled

இம்முறை கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக எதிரே நிற்கும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் த.வெ.க. வேட்பாளர்களை விமர்சித்த அவர், சிங்காநல்லூரில் ஒவ்வொரு குடும்பமும் கே.ஆர்.ஜெயராமை ஆதரிப்பதாக களத்தில் இருந்து தகவல் வருகிறது என கூறினார். இந்தத் தொகுதியில் ஜெயராம் குறைந்தபட்சம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என கூறினார்.

கோவை மாநகராட்சி நிர்வாகம் அதிமுக ஆட்சியில் சிறப்பாக பணியாற்றியது என பேசிய வேலுமணி, இன்று கோவை மாநகராட்சியில் பணிகள் சரியாக நடைபெறுவதில்லை என குற்றம்சாட்டினார். திமுக ஆட்சியில் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, குப்பை வரி என எல்லா கட்டணங்களும் உயர்ந்துள்ளது பற்றி விளாசிய அவர், கோவை மாவட்டத்தில் அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் சொத்துவரி உயர்த்தப்படவில்லை என்பதை குறிப்பிட்டார்.

கோவை மாநகராட்சியில் எக்கச்சக்க வரி உயர்வுகள் நடைபெற்றுள்ளதால், ஒவ்வொரு குடும்பத்திலிருந்து லட்சக்கணக்கில் சிறுது சிறிதாக ஆளும் திமுக அரசு எடுத்துவிட்டதாக குற்றம்சாட்டிய வேலுமணி, இப்படி எடுத்து வெறும் ரூ.1000த்தை வழங்குகின்றது. அதையும் வாக்குறுதி கொடுத்ததை போல அனைவர்க்கும் வழங்காமல் ‘தகுதி உடைய பெண்களுக்கு’ என அறிவித்ததை விமர்சித்தார்.

2018 அதிமுக ஆட்சியில் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் இந்தியாவில் சிறந்த காவல் நிலையமாக மத்திய அரசால் அடையாளம் காணப்பட்டு விருது பெற்றதை குறிப்பிட்ட அவர், இன்று காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது என கூறினார். கஞ்சா என்பது கல்லூரியில் இருந்து பள்ளிக்கு சென்றுள்ளது, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது என்பதற்கு சில சம்பவங்கள் உதாரணமாக உள்ளது என பேசினார். இதற்கெல்லாம் மாற்றம் எடப்பாடி ஆட்சியாக இருக்கும் என அவர் கூறினார்.

3 9 scaled

மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு எப்படி இருந்ததோ அதே போல கண்டிப்பாக மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகும் போது சட்டம் ஒழுங்கு  சிறப்பாக பாதுகாக்கப்படும் என்று பிரதமர் மோடி அவர்களே பேசி உள்ளார் என்பதை வேலுமணி, குறிப்பிட்டார்.

கோவைக்கு சாலைகள், கூட்டுக் குடிநீர் திட்டம், பல்வேறு மேம்பாலங்கள், 6 புதிய கல்லூரிகள், 6 புதிய தாலுக்கா என எல்லாமே அதிமுக ஆட்சியில் செய்து உள்ளதால் மக்களிடம் உரிமையோடு தங்கள் வேட்பாளர்கள் வாக்கு கேட்பார்கள் என வேலுமணி கூறினார்.

கே.ஆர்.ஜெயராம் இப்போதே சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட பகுதிகளுக்கு தேவையான திட்டங்களை (சிங்காநல்லுர் மேம்பாலம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் பல)  பட்டியிலிட்டு உள்ளார் என கூறிய அவர், இவை அனைத்தையும் கே.ஆர்.ஜெயராம் வெற்றி பெற்ற பிறகு தானும் அவருடன் இணைந்து மக்களுக்கு திட்டங்களையும் நிறைவேற்றி கொடுப்போம் என உறுதியளித்தார். நிச்சயமாக எடப்பாடி பழனிசாமி கேட்டத் திட்டங்களை கொடுப்பார் என அவர் கூறினார்.