கோவை மெட்ரோ ரயில் திட்டம் முதல்கட்டமாக அவிநாசி சாலை மற்றும் சத்தி சாலை வழியே செயல்படுத்தபட உள்ளதாக கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில்: கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் கோட்டம் டிஆர்எம் கோவை வந்திருந்தார். அப்போது கோவை ரயில் நிலையத்தின் விரிவாக்கம் சம்பந்தமாகவும், போத்தனூர், வடகோவை ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வடகோவை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் 2026 பிப்ரவரியில் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். பெங்களூருக்கு இரவு நேர ரயில் சேவையை வேண்டுமென கேட்டுள்ளோம். அது சம்பந்தமாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கோவை ரயில் நிலைய விரிவாக்க பணிகளை மேற்கொள்வது, அதற்கான நிலங்களை தேர்வு செய்வது போன்ற பணிகளிலும் ஈடுபட்டுள்ளோம். ரயில் நிலையத்தில் உள்ள கூட்செட் பகுதியை பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர் போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.
கோவை மெட்ரோ ரயில் திட்டம் முதல்கட்டமாக அவிநாசி சாலை மற்றும் சத்தி சாலை வழியே செயல்படுத்தபட உள்ளது. அவிநாசி சாலை வழித்தடம் உக்கடம் பேருந்து நிலையம் முதல் கோவை விமான நிலையம் வழியே நீலம்பூர் வரை 20.4 கி.மீ. நீளம் கொண்டதாகவும், சத்தி வழித்தடம் கோவை ரயில் நிலையம் துவக்கி வலியம்பாளையம் பிரிவு வரை 14.4 கி.மீ. நீளம் கொண்டதாகவும் அமையவுள்ளது.
டெக்ஸ்டூல் பாலத்திலிருந்து கணபதி சூர்யா மருத்துவமனை வரை உள்ள பகுதிகளில் அதிக ஆக்கிரமிப்பு உள்ளது. 1.4 கிலோ மீட்டர் தொலைவில் இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக சர்வே செய்து வருகின்றோம். முழுமையாக எந்த அளவிற்கு முடித்துள்ளோம் என்பதை விரைவில் அறிவிப்போம்.
விமான நிலையம் விரிவாக்கத்தைப் பொறுத்தவரை மாநில அரசு நிலங்களை மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டது. மத்திய அரசுதான் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவுடன் இணைந்து விரிவாக்கம் சம்பந்தமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது தான் சுற்றுச்சுவர் கட்டும் பணியை துவங்கி உள்ளனர். விமான நிலைய விரிவாக்கம் சம்பந்தமாக மத்திய அரசுக்கு அறிவுறுத்த உள்ளோம் என்றார்.
