கோவை மேற்குப் புறவழிச்சாலை திட்டத்தின் முதல்கட்ட பணிகள் மீண்டும் தாமதமாகியுள்ளன. இப்பணிகள் ஜனவரி இரண்டாம் வாரத்தில் முடியும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
கோவை – பாலக்காடு சாலையில் மதுக்கரை அருகே உள்ள மைல்கல் பகுதியில் தொடங்கி, நரசிம்மநாயக்கன் பாளையம் வரை 32.43 கிலோமீட்டர் நீளத்தில், ரூ.250 கோடி மதிப்பில் மேற்குப்புறவழிச்சாலை திட்டம் மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில், முதல் கட்டமாக மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.80 கிலோமீட்டர் நீளத்தில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
முதலில் இந்தப் பணி ஜூலை மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சில தொழில்நுட்ப மற்றும் நிலப் பணிகள் தாமதமானதால், வரும் நவம்பர் இறுதிக்குள் பணி முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தாமதமாகியுள்ளது.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்: மண் கிடைக்காதது, சின்னவேடம்பட்டி ஏரிப் பகுதியில் இருந்து மண் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு, கட்டுமானப் பொருட்கள் விலை அதிகரிப்பு, தொழிலாளர் தட்டுப்பாடு, மழையால் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக பணிகள் தாமதமாகியுள்ளன.
முதல் கட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. சுண்டக்காமுத்தூர், பேரூர் செட்டிப்பாளையம், தீத்திப்பாளையம் போன்ற பகுதிகள் இதில் அடங்கும். பெரும்பாலான பணிகள் முடிந்தாலும், 2.5 கிமீ பகுதியில் தார் போடுதல், மைல்கல் சந்திப்பு மேம்பால பணிகள் உள்ளிட்டவை இன்னும் நடைபெற்று வருகின்றன.
மாதம்பட்டி – சோமையம்பாளையம் வரை 12.10 கிமீ நீளத்தில் ரூ.368 கோடியில் உருவாகும் இரண்டாம் கட்ட சாலைக்கான நிலம் கையகப்படுத்தல் 98% முடிந்துள்ளது. நிதி, நிர்வாக அனுமதி கிடைத்த பின்னர் பணி தொடங்கும். பன்னிமடை – நரசிம்மநாயக்கன்பாளையம் வரை உள்ள 8.09 கிமீ நீளமுள்ள மூன்றாம் கட்டத்திற்கும் நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறினர்.
