கோவையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் அதிவிரைவு இன்டர்சிட்டி ரயிலில் கழிவறை, கை கழுவும் இடங்களில் உள்ள குழாய்களில் நீர் வராததால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

அதிக தூரம் பயணம் செய்யும் பயணிகள், இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக பேருந்துகளை விட ரயிலை பயன்படுத்தி வருகின்றனர்.  உடல்நிலை குறைவு ஏற்பட்டவர்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும் முதியவர்கள் என அனைத்து தரப்பு பயணிகளுக்கும் ரயில் பயணம் பயனுள்ளதாக உள்ளது.

இந்நிலையில், கோவை – சென்னை இன்டர்சிட்டி ரயிலில் கழிவறை பயன்பாட்டுக்கு பின் தண்ணீர் கிடைக்காததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் பயணிகள் இடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. தண்ணீர் இல்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பயணிகளுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே இதனை ரயில்வே ஊழியர்களும், அதிகாரிகளும் உடனடியாக கவனத்தில் கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளிடம் கோரிக்கை எழுந்துள்ளது.