விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பு சார்பில், தமிழில் எழுதி வரும் 5 இளம் படைப்பாளிகளுக்கு விஷ்ணுபுரம்-ரமேஷ் பிரேதன் நினைவு விருது வழங்கப்பட்டது.
நடப்பாண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த புதுச்சேரி எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானார். கவிஞர், புனைவெழுத்தாளர் மற்றும் இலக்கியச் சிந்தனையாளர் என்ற பன்முகங்களைக் கொண்ட ரமேஷ் பிரேதனின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பாகும்.
எனவே, நடப்பாண்டு விஷ்ணுபுரம் விருது ரமேஷ் பிரேதனின் விருப்பப்படியே அவரது நினைவுடன் சிறுகதை, கவிதை, நாவல், நாட்டாரியல் ஆய்வு, நாட்டுப்புறக் கலை, மொழிபெயர்ப்பு, செவ்வியல் கலை என பல்வேறு தளங்களிலும் இயங்கி வரும் இளம் படைப்பாளிகளான தேவி லிங்கம், சஜு, செல்வகுமார் பேச்சிமுத்து, அசோக் ராம்ராஜ், அழகிய மணவாளன் ஆகிய 5 இளம் படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டது. இவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கம், கலைநயமிக்க விருதுச் சிற்பம் ஆகியவை வழங்கப்பட்டன.
முன்னதாக ரமேஷ் பிரேதன் குறித்து எழுத்தாளர் அகரமுதல்வன் இயக்கியுள்ள ‘அம்மை அப்பன் அயோனிகன்’ எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. விழாவில் தெலுங்கு எழுத்தாளர் மதுராந்தகம் நரேந்திரா, கன்னட எழுத்தாளர் கவிஞர் ஜெயந்த் காய்கினி, எழுத்தாளர் ஆஸ்டின் செளந்தர், எழுத்தாளர் அகரமுதல்வன் ஆகியோருடன் எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
