விநாயகர் சதுர்த்தி வரும் ஆகஸ்ட் 27ம் தேதி கொண்டப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை சுமூகமாக நடத்தும் வகையில் கோவை நகர காவல்துறை மற்றும் கோவை மாவட்ட (கிராமப்புற) காவல்துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

இந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் 2,300க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், இந்து அமைப்புகள் மற்றும் பிற மன்றங்களின் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னர், பல்வேறு இடங்களில் மொத்தம் 712 விநாயகர் சிலைகளை (மூன்று அடி மற்றும் அதற்கு மேல்) நிறுவுவதற்கு நகர காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு ஜமாத்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நகர காவல்துறை புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், துணை காவல் ஆணையர்கள் தேவநாதன் (வடக்கு) மற்றும் கார்த்திகேயன் (தெற்கு) ஆகியோர், கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் நீர்நிலைகளில் சிலைகளை கரைத்தல் ஆகியவற்றை சுமூகமாக நடத்துவது குறித்து கலந்துரையாடினர்.

கிராமப்புற எல்லைகளில் 1,600க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அனுமதிக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு கிராமப்புறங்களில் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் 1,700க்கும் மேற்பட்ட பெரிய சிலைகள் கரைக்கப்பட்டன.