சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் வெற்றிப்படிக்கட்டுகள் நூல் அறிமுக விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி வெற்றிப்படிக்கட்டுகள் நூலினை வெளியிட, பள்ளியின் துணை முதல்வர் சக்திவேல் பெற்றுக் கொண்டார்.

தமிழாசிரியர் கார்த்திகேயன் நூலினை அறிமுகம் செய்து வைத்து பேசுகையில்: மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக இந்நூல் விளங்குகிறது. எல்லாப் பருவத்தினருக்கும் பயன் தருகின்ற வகையில் அமைந்துள்ள இந்நூலில் உள்ள வினாக்களைப் பற்றியும், அதற்கு கவிதாசன் அவர்களின் சிறந்த கருத்துகள் அடங்கிய பதில்களைப் பற்றியும் எடுத்துரைத்தார். வாசிப்பு, விடாமுயற்சி குறித்து நூலில் உள்ள கருத்துக்களைப் பகிர்ந்தார்.

பள்ளிச் செயலர் கவிதாசன் தலைமையுரையில், ஒரு நல்ல புத்தகம் நூறு நண்பர்களுக்குச் சமம் என்ற கலாம் அவர்களின் கூற்றை நினைவு கூர்ந்தார். வெற்றிக்குத் தேவையான ‘தகுதி’ (தன்னம்பிக்கை + குறிக்கோள் + திறமை) பற்றி விளக்கினார். மாணவர்கள் தங்களைப் பற்றி எதிர்காலத்தில் ஒரு புத்தகம் எழுதும் அளவுக்குச் சாதனையாளர்களாக வளர வேண்டும் என ஊக்கப்படுத்தினார்.

நூலின் தொகுப்பாசிரியர் பொன்.சங்கர், பள்ளியின் தமிழாசிரியர்கள் சிவக்குமார், கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டனர்.