கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஒன்பது லட்சம் கன மீட்டருக்கும் அதிகமாக கழிவுகள் குவிந்து கிடப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
வெள்ளலூர் குப்பை கிடங்கில் 100 வார்டுகளில் சேரும் குப்பைகள் கொட்டப்படுகிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து குப்பைகள் வாங்கப்பட்டு முறையாக கையாளப்படுவதாக மாநகராட்சி தெரிவித்தாலும், குப்பை கிடங்கினால் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயமும் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வெள்ளலூர் குப்பை கிடங்குகளில் ஆய்வு செய்தது. இதில் பல்வேறு குறைபாடுகள் சுட்டி காண்பிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வில் கூறியிருப்பது: வெள்ளலூர் குப்பை கிடங்கில் 3 வெவ்வேறு பகுதிகளில் 9 லட்சத்து 29 ஆயிரத்து 109 கன மீட்டர் சுற்றளவுக்கு கழிவுகள் தேங்கி உள்ளன. ஒரு கன மீட்டர் என்பது நீளம், அகலம், உயரம் கொண்ட ஒரு கன சதுரத்தின் கன அளவாகும்.
வெள்ளலூர் குப்பை கிடங்கில் தினமும் கையாளப்படும் 1,100 டன் கழிவுகளில் சுமார் 990 டன் மட்டுமே பதப்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற கழிவுகள் முறையாக கையாளப்படுவதில்லை. இந்த ஆண்டு பிப்ரவரியில் அந்த இடத்தில் இருந்து கோழி மற்றும் இறைச்சி கழிவுகளை பதப்படுத்தும் வசதி மூடப்பட்டுள்ளது.
அதன் பிறகு மாநகராட்சி நிர்வாகம் மதுரை, கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 15 டன்களை அனுப்பத் தொடங்கி உள்ளது. ஆனால் இந்த அகற்றல் குறித்த எந்த பதிவுகளும் முறையாக பராமரிக்கப்படவில்லை.
போதுமான சுத்திகரிப்பு திறன் இல்லாததால் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 110 டன் கலப்பு கழிவுகள் உரம் தயாரிக்கும் மையம் அருகில் திறந்தவெளியில் கொட்டப்படுகிறது. மழைக் காலங்களில் நீர் கழிவை அகற்ற போதுமான வடிகால் வசதி இல்லை. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இருந்தாலும் தொடர்ந்து இயக்கப்படுவதாக தெரியவில்லை. இதுபோன்ற குறைபாடுகளை நீக்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
