சில நாட்களுக்கு முன்னதாக கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக 12.01.2026 அன்று நடைபெற்ற விசாரணையில் நீதியரசர்கள் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை பிரதிவாதியாக இணைத்து, 6 வாரங்களுக்குள் குப்பைக் கிடங்கை ஆய்வு செய்து, 28.02.2026க்கு முன்பாக ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதனால் அந்த ஆய்வு பிப்.12,13 ஆகிய தேதிகளில் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் நடைபெற்றது.
சமூக செயற்பாட்டாளரும், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளலூர் பகுதியில் வசித்து வரும் குடியிருப்பாளரும், இவ்விவகாரத்தில் மனுதாரருமான K.S. மோகன், இந்த ஆய்வில் தான் பங்கேற்க, கருத்து தெரிவிக்க, சேகரிக்கப்பட்ட தரவுகளை அறிந்து கொள்ள, ஆய்வு செயல்முறையை பார்வையிட முயன்றபோது தனக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறி சமீபத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகனை அவர்களை நேரில் சந்தித்து, எந்த அழுத்தங்களுக்கும் இடம்கொடாத படி இந்த ஆய்வு அறிக்கை இருக்கவேண்டும், அதை உறுதி செய்ய உதவவேண்டும் என மனு ஒன்றை சமர்ப்பித்தார்.
இந்த நிலையில் குப்பைக்கிடங்கால் பாதிக்கப்பட்ட தரப்பினரையும் கட்டாயமாக இணைத்து வெளிப்படையான மறுஆய்வு மேற்கொள்ள வேண்டும், சேகரிக்கப்பட்ட அனைத்து தரவுகளும் பொதுமக்கள் அறிய வெளியிடப்பட வேண்டும், நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இந்திய ஜனாதிபதி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தெற்கு மண்டல அமர்வுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
