ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்காக தமிழக அரசு சார்பில் தடுப்பூசி மற்றும் மருத்துவ முகாம் கோவையில் திங்கட்கிழமை துவங்கியது.
கோவை மாவட்டத்திலிருந்து ஹஜ் யாத்திரை செல்லும் யாத்திரிகர்களுக்காக, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் பிப்ரவரி 7ம் தேதி வரை, ஆறு நாட்களுக்கு, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படுகிறது.
முகாமில், சர்க்கரை அளவு பரிசோதனை, ரத்த அழுத்தம், கல்லீரல் செயல்திறன், சிறுநீரக செயல்திறன், மார்பக எக்ஸ் ரே உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், Meningococcal மற்றும் Seasonal Influenza தடுப்பூசிகளும் யாத்திரிகர்களுக்கு செலுத்தப்படுகின்றன. இதில், 65 வயதுக்கு மேற்பட்ட 37 யாத்திரிகர்களுக்கு மட்டும் பருவகால காய்ச்சல் (Seasonal Influenza) தடுப்பூசி பிரத்யேகமாக வழங்கப்படுகிறது.
முகாமின் மூலம், தினமும் 50 யாத்திரிகர்கள் வீதம், மொத்தமாக 6 நாட்களில் 300 யாத்திரிகர்கள் பயனடைவார்கள் என கோவை மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
